செய்திகள்
கொரோனா வைரஸ்

வேலூர் மாவட்ட எல்லைகளில் 14 இடங்களில் கொரோனா பரிசோதனை

Published On 2020-05-01 13:12 GMT   |   Update On 2020-05-01 13:12 GMT
வெளியூர், வெளி மாநிலங்களிலிருந்து வருபவர்களுக்கு வேலூர் மாவட்ட எல்லைகளில் 14 இடங்களில் கொரோனா பரிசோதனை சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
வேலூர்:

வேலூர் மாவட்டம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தற்போது வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் தங்கியிருக்கக்கூடிய பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல அரசு அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் தங்கியுள்ள வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி வேலூர் மாவட்டத்தில் அரப்பாக்கம், வல்லம், ஆசனாம்பட்டு, காட்பாடி கிறிஸ்டியான் பேட்டை, திருவலம், கீரைசாத்து, தெங்கால், முத்தரசி குப்பம், பரதராமி, சைனகுண்டா, மாதனூர், பத்தல பள்ளி, அழிஞ்சி குப்பம், ஓணாங்குட்டை ஆகிய 14 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இங்கு மருத்துவக் குழுவினர் போலீசார் உள்ளிட்ட குழுவினர் நிறுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வரும் வேலூர் பொதுமக்களை கொரோனா பரிசோதனைக்கு பின்னர் அனுப்பி வைக்கின்றனர்.

மேலும் வேலூர் மாவட்டத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலர்கள், ஊராட்சி செயலாளர்கள் ஆகியோர் கிராமப் பகுதிகளில் வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து யாராவது வந்திருக்கிறார்களா? என கண்காணிக்க வேண்டும்.

அப்படி வந்திருந்தால் அவர்கள் குறித்த விவரங்களை வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறை, வட்டார வளர்ச்சி அலுவலர், தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என கலெக்டர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் வெளியூர்களில் இருந்து வந்தவர்கள் தானாக முன்வந்து கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags:    

Similar News