செய்திகள்
அதிகாரிகளை முற்றுகையிட்ட டிரைவர்கள்.

வேலூரில் 182 பேர் வீடுகளில் கொரோனா ஸ்டிக்கர் ஒட்டிய அதிகாரிகளை முற்றுகையிட்ட டிரைவர்கள்

Published On 2020-04-29 16:37 IST   |   Update On 2020-04-29 16:37:00 IST
வேலூரில் வெளிமாநிலங்கள் சென்று வந்த 182 பேர் வீடுகளில் கொரோனா ஸ்டிக்கர் ஒட்டிய அதிகாரிகளை கண்டித்து டிரைவர்கள் முற்றுகையிட்டனர்.

வேலூர்:

கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதில் வெளிமாவட்டங்களில் இருந்து வேலூர் சிஎம்சி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக வந்த வடமாநிலத்தவர்கள் உணவு, தங்குவதற்கு பணமில்லை என்று கூறி கலெக்டரிடம் புகார் அளித்தனர்.

இதையடுத்து அவர்களுக்கு லாட்ஜ் கட்டணத்தில் சலுகை, 3 வேளை உணவும் வழங்கப்பட்டது. இதற்கிடையே சிகிச்சை முடிந்த அவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல அனுமதிக்க கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து கடந்த வாரம் மாவட்ட நிர்வாகம் சார்பில் தனியார் வாடகை கார் மூலம் ஜார்கண்ட், பீகார், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஊரடங்கு காரணமாக வடமாநிலங்கள் சென்ற வாகனங்கள் மீண்டும் வேலூர் வருவதில் சிக்கல் ஏற்பட்டது.

இதையடுத்து அந்த மாநில அரசின் உதவியோடு 2 நாட்களுக்கு முன்பு டிரைவர்களின் ஒரு குழுவினர் வேலூர் திரும்பினர். வேலூர் வந்த 182 டிரைவர்களை அலமேலுமங்காபுரம் தனியார் மண்டபத்தில் தங்க வைத்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 132 பேருக்கு அறிகுறி இல்லை என்று பரிசோதனை முடிவில் தெரிய வந்தது.

இதையடுத்து 132 பேர் நேற்று முன்தினம் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மீதமுள்ள 50 டிரைவர்களுக்கு பரிசோதனை செய்யப் பட்டது. அவர்களுக்கு நேற்று பாதிப்பில்லை என்று முடிவு வெளியானது.

இதற்கிடையே வெளிமாநிலங்களுக்கு சென்று திரும்பிய டிரைவர்களின் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் என்று ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த டிரைவர்கள் அவர்கள் தங்கியிருந்த மண்டபத்திற்கு சென்று அங்கிருந்த போலீசாரிடம் முறையிட்டனர். தொடர்ந்து எங்களுக்கு முடிவு தெரியும் வரையில் இங்கிருந்து செல்ல மாட்டோம் என்று கூறியுள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்றனர். அங்கிருந்த டிரைவர்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டு கொரோனா பாதிப்பில்லாத எங்கள் வீடுகளில் ஏன் கொரோனா ஸ்டிக்கர் ஓட்டுநீர்கள் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து அதிகாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட டிரைவர்களிடம் பராமரிப்பு இல்லாத இல்லாவிட்டாலும் நீங்கள் வெளிமாநிலங்களுக்கு சென்று வந்துள்ளதால் உங்களை 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் அந்த ஸ்டிக்கரில் பாதிக்கப்பட்டவர் என்று குறிப்பிடப்படவில்லை. வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் என்று தான் உள்ளது.

இதை நீங்கள் தவறாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்று கூறியுள்ளார். இதை ஏற்ற டிரைவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Similar News