வேதாரண்யம் அருகே பெரியார் சிலைக்கு செருப்பு மாலை அணிவித்து அவமதிப்பு
வேதாரண்யம்:
வேதாரண்யத்தை அடுத்த தேத்தாகுடி தெற்கு கிராமத்தில் வேதாரண்யம்- நாகை செல்லும் பிரதான சாலையில் மாவடிவாய்க்கால் என்ற இடத்தில் பெரியார் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சிலை மீது மர்ம நபர்கள் செருப்புமாலை அணிவித்து அவமதித்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த தி.மு.க., தி.க உள்ளிட்ட கட்சிகள் அங்கு குவிய தொடங்கினர்.
இதையடுத்து சமபவ இடத்திற்கு வந்த வேதாரண்யம் போலீசார் பெரியார் சிலை மீது போடப்பட்ட செருப்பு மாலையை அப்புறப்படுத்தினர். பின்னர் அப்பகுதியில் கூட்டம் கூடாதவாறு போலீஸ் பாதுகாப்பை பலப்படுத்தினர்.
இதுகுறித்து வேதாரண்யம் போலீசில் திராவிடர் கழகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின் பேரில் வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமரன் மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஊரடங்கு உத்தரவால் ஆட்கள் நடமாட்டம் இல்லாத காரணத்தால் பெரியார் சிலைமீது செருப்பு மாலை அணிவித்த மர்ம நபர் யார் என்பதை கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அப்பகுதியில் சி.சி.டி.வி. கேமராக்கள் உள்ளதா எனவும், யார் மீதாவது சந்தேகம் உள்ளதா என அந்த கிராமத்தினரிடம் விசாரித்து வருகின்றனர்.
ஊடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் அரசியல் கடசியினர் வீடுகளில் முடங்கியுள்ளனர். இதனால் இந்த பிரச்சனை திருவள்ளுவர் சிலை அவமதிப்பு பிரச்சனைபோல் பூதாகரமாகுவதற்குள் குற்றவாளிகளை பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.