செய்திகள்
நாட்டுப்படகு மீனவர்

நாட்டுப்படகு மீனவர்களுக்கு கடும் நிபந்தனைகளுடன் மீன்பிடிக்க மத்திய அரசு அனுமதி

Published On 2020-04-13 11:47 GMT   |   Update On 2020-04-13 11:47 GMT
மத்திய அரசு நாட்டுப்படகு மீனவர்களுக்கு கடும் நிபந்தனைகளுடன் மீன்பிடிக்க அனுமதியளித்துள்ளது
நாகப்பட்டினம்:

மத்திய அரசு நாட்டுப்படகு மீனவர்களுக்கு கடும் நிபந்தனைகளுடன் மீன்பிடிக்க அனுமதியளித்துள்ளது இதனால் மீனவர்கள் குழப்பமடைந்துள்ளனர்.

தஞ்சை மாவட்டம் கொள்ளுக்காடு, புதுப் பட்டினம், மல்லிப்பட்டினம், சின்னமனை, சேதுபாவா சத்திரம், கழுமங்குடா,காரங்குடா,அடைக்கத்தேவன்,மத்திரிப்பட்டிணம்,அண்ணாநகர் புதுத்தெரு, செம்பியன்மா தேவிபட்டிணம், கணே‌ஷபுரம் உள்பட 27 மீனவ கிராமங்கள் உள்ளது. இதில் இஞ்சின் பொருத்தப்பட்ட பைபர்கிளாஸ் படகு,பாரம்பரிய நாட்டுப்படகு என 4500 படகுகள் உள்ளன. இவை அனைத்தும் தற்போது உலகையே உலுக்கிவரும் கொரோனா வைரஸால் மத்திய,மாநில அரசுகள் ஊரடங்கு அறிவிப்பதற்கு ஒருவார காலம் முன்கூட்டியே கடந்த 30 நாட்களுக்கு மேலாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் மத்திய அரசு பல்வேறு கடும் நிபந்தனைகளுடன் நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க அனுமதியளித்து உள்ளது. இதன்படி பிடித்துவரும் மீன்களை மீன் ஏலக்கூடங்களில் ஏலம்விடக்கூடாது, ஏலக்கூடங்களில் மீனவர்கள் கூட்டம் கூடக்கூடாது, பிடித்துவரும் மீன்களை அந்தந்த கிராமங்களில் உள்ள வியாபாரிகளிடமே விற்பனை செய்ய வேண்டும்.

மீன் விற்பனையை காலை 7 மணிக்குள் முடித்துகொள்ள வேண்டும் அதற்கு மேல் விற்பனை செய்யப்படும் மீன்களை பறிமுதல் செய்வதுடன் படகு உரிமமும் ரத்து செய்யப்படும், ஒவ்வொரு கிராமங்களிலும் குழு அமைத்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வலியுறுத்த வேண்டும், மீன்வளத்துறை, காவல்துறை,வருவாய் துறை இணைந்து மீனவர்கள் கூட்டம் கூடுவதை கண்காணிக்க வேண்டும், மீன் இறங்கு தளங்களில் விற்பனை செய்யக்கூடாது, மீன்பிடி தொழிலுக்கு செல்லும் படகுகள் கூட்டமின்றி ஒன்றன் பின் ஒன்றாக கரைக்கு வரவேண்டும், நிபந்தனைகளை மீறும் படகுகள் மீது பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுக்கப்படும்,மீனவர்கள் முக்கவசம்,கையுறை கட்டாயம் அணியவேண்டும் வலைகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் அடிக்கடி கை கழுவ வேண்டும் உள்ளிட்ட 11 க்கும் மேற்பட்ட நிபந்தனைகளுடன் மீன்பிடிக்க அனுமதி வழங்கியுள்ளது.

வெளியூர் வியாபாரிகள் வந்தால்தான் மீன் நஷ்டம் இன்றி விற்பனை செய்ய முடியும். காலை 7 மணி என்ற காலக்கெடுவை கடைபிடிப்பது கஷ்டம் மேலும் மீனவர்கள் கூட்டம் கூடுவதை கட்டுப்படுத்துவது கடினம் எனவேதான் கடும் நிபந்தனைகளுடன் மீன்பிடி தொழில் செய்ய முடியுமா? என்ற குழப்பத்தில் உள்ளோம் என கூறுகின்றனர்.

Tags:    

Similar News