செய்திகள்
கைது

காரைக்குடியில் முகமூடி கொள்ளையன் கைது

Published On 2020-02-15 11:53 GMT   |   Update On 2020-02-15 11:53 GMT
தலைமை ஆசிரியர் வீட்டுக்குள் புகுந்த முகமூடி கொள்ளையன் கண்காணிப்பு கேமிரா உதவியால் சிக்கினான்.

காரைக்குடி:

காரைக்குடி ஆனந்தா நகர் பகுதியில் வசிப்பவர் அமல்ராஜ் கென்னடி, இவர் சாக்கோட்டை அருகே ஜெயங்கொண்டத்தில் உள்ள அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக உள்ளனர்.

இவரது வீட்டைச் சுற்றிலும் கண்காணிப்பு கேமிராக்கள் உள்ளன. இதன் பதிவை செல்போனில் பார்க்கும்படி இணைந்து உள்ளார். சம்பவத்தன்று பள்ளியின் ஆண்டு விழாவுக்கு அமல் ராஜ் கென்னடி குடும்பத்தினருடன் சென்றார்.

அங்கிருந்த படியே தனது செல்போன் மூலம் வீட்டில் உள்ள கேமிரா பதிவுகளை அமல்ராஜ் கென்னடி பார்வையிட்டார். அப்போது ஒரு கேமிரா திருப்பி வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

இதனால் சந்தேகம் அடைந்த அவர், மற்ற கேமிராக்கள் பதிவையும் பார்வையிட்டார். அதில் முகமூடி கொள்ளையன் வீட்டுக்குள் புகுந்திருப்பது தெரியவந்தது.

அதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அமல்ராஜ் கென்னடி, காரைக்குடியில் உள்ள சக ஆசிரியர்களுக்கு தகவல் கொடுத்தார்.

அவர்கள் விரைந்து சென்று அமல்ராஜ் கென்னடி வீட்டுக்குள் புகுந்து முகமூடி கொள்ளையனை மடக்கி பிடித்தனர். அவனுக்கு தர்ம அடி கொடுத்து காரைக்குடி வடக்கு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியதில், முகமூடி கொள்ளையன் நாகர்கோவிலை சேர்ந்த ராபின் (வயது 35) என்பது தெரியவந்தது. இவன் வேறு எங்கெல்லாம் கைவரிசை காட்டியுள்ளான் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News