செய்திகள்
அமைச்சர் பாஸ்கரன்

பா.ஜனதா கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. எப்போது வேண்டுமானாலும் விலகலாம்- அமைச்சர் பாஸ்கரன் பேச்சு

Published On 2020-01-22 10:32 GMT   |   Update On 2020-01-22 10:32 GMT
பாஜக கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. எப்போது வேண்டுமானாலும் விலகலாம். அதே நேரத்தில் தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதா இணைய வாய்ப்பு உள்ளது என்று அமைச்சர் பாஸ்கரன் பேசியுள்ளார்.

சிவகங்கை:

எம்.ஜி.ஆரின் 103வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் சிவகங்கை மாவட்டம், இளையான்குடி வாள் மேல்நடந்த அம்மன் கோவில் அருகே நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சர் பாஸ்கரன் கலந்து கொண்டு பேசியதாவது:-

சிவகங்கை மாவட்டம் எப்போதும் பின் தங்கிய மாவட்டம், இந்த ஆட்சியில் மாவட்டத்திற்கு தேவையான அனைத்து திட்டங்களையும் முதல்வர் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்.

குடிமராமத்து பணிகள் மூலம் இளையான்குடி நகர் ஒன்றிய பகுதிகளில் தண்ணீர் தேவைகளை நிறைவேற்றி தந்துள்ளார்.

இஸ்லாமியர்கள் என்னிடம் குடியுரிமை சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி மனு அளித்தனர். இஸ்லாமிய சமுதாய மக்கள் நடந்து முடிந்த எந்த தேர்தலிலும் அ.தி.மு.க.விற்கு வாக்களிக்கவில்லை.

இருந்தாலும் அ.தி.மு.க. அரசு உங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும், வசதிகளையும் திட்டங்களையும் இன்று வரை செய்து வருகிறது.


பா.ஜனதா கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. எப்போது வேண்டுமானாலும் விலகலாம். அதே நேரத்தில் தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதா இணைய வாய்ப்பு உள்ளது. அப்படி இணைந்தால் இஸ்லாமிய மக்களாகிய நீங்கள் தி.மு.க.வுக்கு வாக்களிப்பீர்களா? அல்லது அ.தி.மு.க.வுக்கு வாக்களிப்பீர்களா? இஸ்லாமிய சமுதாய மக்களுக்கு அ.தி.மு.க. என்றும் உறுதுணையாக இருக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News