செய்திகள்
போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ள பஞ்சாயத்து அலுவலகம்.

2 பேருக்கு வெற்றி சான்றிதழ் - சங்கராபுரம் பஞ்சாயத்து அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு

Published On 2020-01-06 10:33 GMT   |   Update On 2020-01-06 10:33 GMT
சங்கராபுரம் பஞ்சாயத்து அலுவலகத்திற்கு உறுப்பினர்கள் பதவி ஏற்க வந்த நிலையில் தலைவர் பதவி ஏற்க வெற்றி சான்றிதழ் பெற்ற 2 பேரும் வரலாம் என்பதால் அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
காரைக்குடி:

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள சங்கராபுரம் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு முன்னாள் தலைவர் மாங்குடியின் மனைவி தேவி மற்றும் ஐயப்பன் என்பவரது மனைவி பிரியதர்ஷினி போட்டியிட்டனர்.

இதில் முதலில் தேவி வெற்றி பெற்றதாக சான்றிதழ் வழங்கப்பட்டது. அதன் பிறகு மறுவாக்கு எண்ணிக்கை நடைபெற்றதாகவும், இதில் பிரியதர்ஷினி வெற்றி பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டது. அவருக்கும் வெற்றி சான்றிதழ் வழங்கப்பட்டது. ஒரே பஞ்சாயத்தில் 2 பேருக்கு வெற்றி சான்றிதழ் வழங்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து மதுரை ஐகோர்ட்டில் தேவி சார்பில் வழக்கு தொடரப்பட்டது. விசாரணை நடத்திய ஐகோர்ட்டு பிரியதர்ஷினி தலைவர் பதவி ஏற்க இடைக்கால தடை விதித்து விசாரணையை வருகிற 8-ந்தேதிக்கு ஒத்திவைத்தது. மேலும் பிரியதர்ஷினி மற்றும் தேர்தல் ஆணையம் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யவும் அறிவுறுத்தப்பட்டது.

இந்த நிலையில் நேற்று மாலை வட்டாட்சியர் தலைமையிலான அதிகாரிகள் தேவி வீட்டிற்கு சென்றனர். வீடு பூட்டப்பட்டு இருந்ததால் வீட்டு சுவற்றில் அவரது வெற்றி ரத்து செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பாணையை ஒட்டிச் சென்றனர்.

ஐகோர்ட்டில் வழக்கு விசாரணையில் இருக்கும்போது இதுபோன்ற நடைமுறைகள் தேவையற்றது என தேவி தரப்பில் கூறப்பட்டது. இந்த நிலையில் இன்று உள்ளாட்சி உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழா நடைபெற்றது.

சங்கராபுரம் பஞ்சாயத்து அலுவலகத்திற்கும் உறுப்பினர்கள் பதவி ஏற்க வந்தனர். இந்த நிலையில் தலைவர் பதவி ஏற்க வெற்றி சான்றிதழ் பெற்ற 2 பேரும் வரலாம்? என்பதால் அங்கு பதட்டம் காணப்பட்டது.

இதனை தொடர்ந்து போலீஸ் துணை சூப்பிரண்டு அருண் தலைமையில் பஞ்சாயத்து அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.




Tags:    

Similar News