செய்திகள்
ஐந்துரதம் டிக்கெட் கவுண்டரில் தமிழ் எழுத்து இல்லை

மாமல்லபுரம் ஐந்துரதம் பகுதியில் டிக்கெட் கவுண்டரில் தமிழ் எழுத்து இல்லை - சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி

Published On 2019-10-28 10:17 GMT   |   Update On 2019-10-28 10:19 GMT
மாமல்லபுரம் ஐந்துரதம் பகுதியில் டிக்கெட் கவுண்டரில் தமிழ் எழுத்துக்கள் இல்லை. மாமல்லபுரம் வந்த தமிழ் ஆர்வலர்கள், சுற்றுலா பயணிகள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

மாமல்லபுரம்:

மாமல்லபுரத்தில் கடந்த 11-ந் தேதி பிரதமர் மோடியும்-சீன அதிபர் ஜின்பிங்கும் சந்தித்து பேசினார்.

தலைவர்களின் இந்த சந்திப்புக்கு பிறகு மாமல்லபுரம் பகுதி மேலும் பிரபலம் அடைந்து உள்ளது. இதனால் தற்போது சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் வருகிறது.

இதனால் அங்குள்ள புராதன சின்னங்களை கூடுதலாக பராமரிக்க வேண்டும் என்பதை காரணம் காட்டி தொல்லியல்துறை இதுவரை நுழைவு கட்டணம் வசூலிக்காத வெண்ணை உருண்டை பாறைக்கு உள் நாட்டவர்களுக்கு 40ரூபாயும், வெளிநாட்டவர்களுக்கு 600ரூபாயும் கட்டணம் வசூலித்து வருகின்றன.

இந்த புதிய கட்டண நடைமுறைக்கு உள்நாட்டு சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

இந்தநிலையில் தற்போது மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் ஆன்லைன் வழியாக கிரிடிட் கார்டு பயன்படுத்தி நுழைவு சீட்டு வாங்கினால் உள்நாட்டவருக்கு 5ரூபாய் தள்ளுபடியும் வெளிநாட்ட வருக்கு 50ரூபாய் தள்ளுபடியும் கொடுத்து வருகிறார்கள்.

இந்த வசதி இருப்பதை பயணிகளுக்கு தெரிய படுத்தும் வகையில் தற்போது டிக்கட் கவுண்டர்கள் அருகே அதற்கான போர்டுகளை தொல்லியல்துறையினர் வைத்து உள்ளனர். அதில் தமிழ் எழுத்துக்கள் இல்லை. மாமல்லபுரம் வந்த தமிழ் ஆர்வலர்கள், சுற்றுலா பயணிகள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

அறிவிப்பில் தமிழிலும் விபரம் இருக்க வேண்டும் என்று தொல்லியல்துறைக்கு கோரிக்கை வைத்து உள்ளனர்.

Tags:    

Similar News