செய்திகள்
தீ விபத்து நடந்த இடத்தை மத்திய கூட்டுறவு நலவங்கி தலைவர் வாலாஜாபாத் பா. கணேசன் பார்வையிட்டார்.

காஞ்சீபுரம் மத்திய கூட்டுறவு வங்கியில் தீ விபத்து- ஆவணங்கள் எரிந்து நாசம்

Published On 2019-10-28 10:13 GMT   |   Update On 2019-10-28 10:13 GMT
காஞ்சீபுரம் மத்திய கூட்டுறவு வங்கியில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. இதில் ஆவணங்கள், பொருட்கள், கம்ப்யூட்டர்கள் முழுவதும் எரிந்து நாசம் ஆகின.

காஞ்சீபுரம்:

காஞ்சீபுரம், காமராஜர் சாலையில் காஞ்சீபுரம் மத்திய கூட்டுறவு வங்கியின் கிளை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. தொடர் விடுமுறையையொட்டி கடந்த வெள்ளிக்கிழமை மாலை பணி முடிந்ததும் வங்கியை பூட்டிவிட்டு ஊழியர்கள் சென்றனர்.

இன்று அதிகாலை 5 மணியளவில் வங்கியின் உள்ளே இருந்து கரும்புகை வெளியே வந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த காவலாளி வங்கி அதிகாரிகளுக்கும், விஷ்ணு காஞ்சி போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்ததும் காஞ்சீபுரம் தீயணைப்பு வீரர்கள் வரைந்து வந்தனர். அவர்கள் வங்கி ஊழியர்கள் உதவியுடன் கதவை திறந்து உள்ளே சென்றனர்.

அப்போது வங்கியில் உள்ள கேஷியர் அறையில் இருந்த முக்கிய ஆவணங்கள், பொருட்கள், கம்ப்யூட்டர்கள் முழுவதும் எரிந்து கிடந்தது. வங்கியின் ஒரு பகுதியில் எரிந்து கொண்டிருந்த தீயை தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர். இதனால் தீ மேலும் பரவாமல் தடுக்கப்பட்டது.

வங்கியில் நள்ளிரவே தீப்பிடித்து இருப்பதாக தெரிகிறது. இது உடனடியாக காவலாளிக்கு தெரியவில்லை. இன்று அதிகாலைதான் அவர் கரும்புகை வெளியே வருவதை பார்த்து உள்ளார்.

தீ பெரிய அவளில் பரவாததால் அதிகமாக பாதிப்பு ஏற்படவில்லை. இதனால் வங்கி ஊழியர்கள் நிம்மதி அடைந்தனர்.

வங்கியில் தீப்பிடித்தது பற்றி தெரிந்ததும் ஏராளமான பொதுமக்கள் அங்கு திரண்டனர். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News