செய்திகள்
சாலை மறியல்

ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு- ஆலங்குடியில் வியாபாரிகள் சாலை மறியல்

Published On 2019-09-25 19:54 IST   |   Update On 2019-09-25 19:54:00 IST
ஆலங்குடியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலில் பங்கேற்ற ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆலங்குடி:

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியில் ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதாக தொடர்ந்து  அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தது. இதையடுத்து ஆலங்குடி பகுதியில் கடைகள் முன்புள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் முடிவு செய்தனர்.

அதன்படி இன்று பள்ளிவாசல் தெரு, மெயின்பஜார் உள்ளிட்ட பகுதிகளில் ஆலங்குடி பேரூராட்சி அதிகாரிகள், பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான பணியில் ஈடுபட்டனர். சில கடைகள் முன்பு இருந்த ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றிய நிலையில், திடீரென வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சாலையில் அமர்ந்து மறியலிலும் ஈடுபட்டனர். மறியலில் பங்கேற்ற அங்கு வடை வியாபாரம் செய்து வரும் பாண்டியன் என்பவர் திடீரென தீக்குளிக்க முயன்றார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அவரை அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் தடுத்து நிறுத்தினர். 

மறியல் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி, ஆலங்குடி தாசில்தார் சரவணன், பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன் ஆகியோர் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

Similar News