செய்திகள்
சென்னை ஐகோர்ட்டு

பாலத்திலிருந்து பிணத்தை கயிறு கட்டி இறக்கிய விவகாரம்- தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது ஐகோர்ட்

Published On 2019-08-23 07:43 GMT   |   Update On 2019-08-23 07:48 GMT
வாணியம்பாடி அருகே மேம்பாலத்திலிருந்து பிணத்தை கயிறு கட்டி இறக்கிய விவகாரம் தொடர்பாக ஐகோர்ட்டு தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது.

வாணியம்பாடி:

வாணியம்பாடி அருகே தமிழக-ஆந்திர எல்லையில் நாராயணபுரம் கிராமம் உள்ளது. இங்கு ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

இந்த பகுதியில் ஆதி திராவிடர் காலனி மக்களுக்கென தனியாக மயானம் இல்லை. இதனால் இறந்தவர்களின் பிணத்தை பாலாற்றின் கரையோரம் வைத்து தகனம் செய்து வந்தனர். தங்களுக்கு தனியே மயானத்துக்கு இடத்தை ஒதுக்கித் தருமாறு பல ஆண்டுகளாக அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்நிலையில், கடந்த வாரம் அப்பகுதியை சேர்ந்த குப்பன் (வயது 55). சாலை விபத்தில் உயிரிழந்தார். இதையடுத்து அவரது பிணத்தை பாலாற்றின் கரையோரம் தகனம் செய்ய உறவினர்கள் எடுத்துசென்றனர். ஆனால் அவ்வழியாக உள்ள நில உரிமையாளர்கள் வழிவிட மறுத்தனர். இதையடுத்து வேறுவழியின்றி குப்பனின் பிணத்தை பாடை கட்டி 20 அடி உயரமுள்ள மேம்பாலத்தில் இருந்து பிணத்தை கயிறு கட்டி இறக்கி, பாலாற்றின் கரையோரம் தகனம் செய்தனர். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து கலெக்டர் சண்முகசுந்தரம் உத்தரவின் பேரில் வாணியம்பாடி தாசில்தார் முருகன் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் நாராயணபுரம் பகுதிக்கு சென்று விசாரணை நடத்தினர்.

பின்னர், நாராயணபுரம் பகுதியிலிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் தமிழக-ஆந்திர எல்லை பகுதியான ஜவ்வாதுராமசமுத்திரம் பகுதியில் உள்ள பனந்தோப்பு இடத்தில் அரசுக்கு சொந்தமான 3½ ஏக்கர் புறம்போக்கு நிலத்தில் ஆதி திராவிடர் காலனி மக்களுக்காக மயானத்துக்கு 50 சென்ட் இடத்தை தாசில்தார் ஒதுக்கீடு செய்தார்.

மேலும், அங்கு தகனமேடை அமைக்க கலெக்டரிடம் கூறி உடனடி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதையடுத்து அப்பகுதி மக்கள் கலெக்டர், தாசில்தார் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தனர்.

இதற்கிடையே, சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் முன் நேற்று ஆஜரான மத்திய அரசின் உதவி சொலிசிட்டர் ஜெனரல் கார்த்திகேயன், “இறந்த குப்பனின் பிணம் சாதி பாகுபாட்டின் காரணமாக பாலத்தில் இருந்து கயிறு கட்டி இறக்கப்பட்டு, பின்னர் அங்கிருந்து மயானத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. எனவே இது தொடர்பாக ஐகோர்ட்டு தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து உரிய நடவக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து நீதிபதிகள் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. இது தொடர்பாக கலெக்டரிடம் விளக்கம் கேட்கப்படும்.

Tags:    

Similar News