செய்திகள்
மரணம்

வேலூர் அருகே பள்ளத்தில் தேங்கிய மழை வெள்ளத்தில் மூழ்கி 2 சிறுமிகள் பலி

Published On 2019-08-19 04:54 GMT   |   Update On 2019-08-19 04:54 GMT
வேலூர் அருகே பள்ளத்தில் தேங்கிய மழை வெள்ளத்தில் மூழ்கி 2 சிறுமிகள் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலூர்:

வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அடுத்த கே.ஜி.ஏரியூர் கொல்லைமேடு பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன் (37). இவரது மனைவி ஸ்ரீபா. இவர்களுக்கு ஹரிணி (6), பிரித்திகா (3) என்று 2 மகள்களும், 3 மாத ஆண் குழந்தையும் இருந்தனர்.

வேல்முருகனுக்கு சொந்தமான விவசாய நிலம் அவரது வீட்டின் அருகே உள்ளது. அந்த நிலத்தில் தற்போது வேர்க்கடலை பயிரிட்டுள்ளார்.

அந்த நிலத்தின் அருகே மாட்டு சாணம் கொட்டி வைத்திருந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன் அங்கு கொட்டப்பட்டிருந்த மாட்டு சாணத்தை அங்கிருந்து அப்பறப்படுத்தினர். இதனால் அங்கு 4 அடி பள்ளம் ஏற்பட்டது.

கடந்த 2 நாட்களாக அப்பகுதியில் பெய்து வரும் கனமழையால் நிலத்தில் தேங்கிய மழைநீர் அங்கிருந்த 4 அடி பள்ளத்தில் நிரம்பியது. இந்நிலையில் நேற்று காலை நிலத்தின் அருகே மழையில் ஹரிணியும், தங்கை பிரித்திகாவும் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் பள்ளத்தில் தேங்கிய மழைநீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.

நீண்ட நேரமாகியும் குழந்தைகள் வீட்டிற்கு வராததால் ஸ்ரீபா அவரது தாயார் குழந்தைகளை தேடினர். அப்போது அங்கிருந்த பள்ளத்தில் ஹரிணியும், பிரித்திகாவும் இறந்த நிலையில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து கதறி அழுதனர்.

தகவலறிந்த அணைக்கட்டு தாசில்தார் (பொறுப்பு) குமார், வருவாய் ஆய்வாளர் ராமலிங்கம், வேப்பங்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News