செய்திகள்

குடிநீர் குழாய்கள்-வால்வுகளை சேதப்படுத்தினால் நடவடிக்கை - கலெக்டர் எச்சரிக்கை

Published On 2019-06-25 17:46 GMT   |   Update On 2019-06-25 17:46 GMT
குடிநீர் குழாய்கள் மற்றும் வால்வுகளை சேதப்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.
அரியலூர்:

அரியலூர் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அரியலூர் மாவட்டத்தில் 6 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 750 ஊரக குடியிருப்புகளுக்கும், ஜெயங்கொண்டம் நகராட்சி மற்றும் உடையார்பாளையம் பேரூராட்சிக்கும் கொள்ளிடம் ஆற்றில் இருந்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் நாள் ஒன்றுக்கு 17.01 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 7 கூட்டுக் குடிநீர் திட்டங்களின் மூலம் வழங்கப்படும் குடிநீரை பொதுமக்கள் அதனுடைய மதிப்பை அறிந்து பயன்படுத்திக்கொள்ள வேண்டும். குடிநீர் செல்லும் குழாய்களையும், வால்வுகளையும் அடிக்கடி தெரியாத நபர்கள் மூலம் சேதப்படுத்தப்படுவதாலும், விதிகளுக்கு புறம்பாக மெயின் குடிநீர் குழாய்களில் இணைப்பு செய்து தண்ணீர் எடுப்பதாலும் கடைகோடி கிராமங்களுக்கு குடிநீர் வழங்க முடியாத நிலை உள்ளது.

தற்போது மழை பெய்யாத காரணத்தாலும் உள்ளூரில் உள்ள குடிநீர் ஆதாரங்களின் நீர்மட்டம் குறைந்து கொண்டேயிருப்பதாலும், கூட்டுக் குடிநீர் திட்டப்பணிகளின் குடிநீரினை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். பொதுமக்கள் தற்போதுள்ள சூழ்நிலையில், வெகு தொலைவில் இருந்து கொண்டு வரும் குடிநீரின் மதிப்பை உணர்ந்து வீணாக்காமல், விதிமுறைகளுக்கு புறம்பாக குழாய் இணைப்பு செய்யாமல் பயன்படுத்தி கொள்ள வேண்டும். யாரேனும் குழாய் உடைப்பு செயலிலும், வால்வுகளை சேதப்படுத்தும் பணியிலும், விதிமுறைகளுக்கு புறம்பாக குழாய் இணைப்பு பணியிலும் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு, போலீசார் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். சேதப்படுத்தப்பட்ட பணிக்கான தொகையுடன், அபராத தொகையும் சேர்த்து மூன்று மடங்காக சம்பந்தப்பட்டவர்களிடம் வசூல் செய்யப்படும். விதிமுறைக்கு புறம்பாக ஊராட்சியின் மூலமாகவோ, தனிப்பட்ட முறையிலோ குடிநீர் குழாய் இணைப்பு செய்திருந்தால் துண்டிப்பு செய்து கொள்ள வேண்டும். அதிகாரிகளின் மூலம் கண்டறியப்பட்டால் மிகவும் கடுமையான முறையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
Tags:    

Similar News