செய்திகள்

அனைவரும் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்க வேண்டும் - பொதுமக்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்

Published On 2019-06-24 18:01 GMT   |   Update On 2019-06-24 18:01 GMT
அரியலூர் மாவட்டத்தில் சிறப்பு கிராமசபை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் அனைவரும் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்க வேண்டும் என்று பொது மக்களுக்கு கலெக்டர் விஜயலட்சுமி அறிவுரை வழங்கினார்.
அரியலூர்:

அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நீர் பாதுகாப்பு மற்றும் நீர் மேலாண்மை குறித்த சிறப்பு கிராம சபை கூட்டம் அனைத்து கிராமங்களிலும் நடத்தப்பட்டு வருகிறது. இதில் அஸ்தினாபுரம் கிராம ஊராட்சியில் மாதிரி பள்ளி வளாகத்தில் நடந்த சிறப்பு கிராம சபை கூட்டத்திற்கு கலெக்டர் விஜயலட்சுமி தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-

சிறு குளங்கள், குட்டை மற்றும் ஏரிகளை தூர்வாரி மழை நீரை சேமிக்க வேண்டும். புதிதாக மரக்கன்றுகளை நடுவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். புதிதாக கட்டப்படும் வீடுகள், சமுதாயக்கூடங்கள் மற்றும் பொதுக் கட்டிடங்களில் மழை நீர் சேகரிப்புத் தொட்டி அமைத்து, மழை நீரை சேமிக்க வேண்டும்.

ஏற்கனவே உள்ள கட்டிடங்களில் மழை நீர் தொட்டியை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். மழை நீர் சேகரித்தல் பற்றிய விழிப்புணர்வு ஊர்வலங்கள் நடத்தப்பட வேண்டும். கிராம ஊராட்சிகளிலுள்ள பொது இடங்கள் மற்றும் பள்ளிகளில் நாடகங்கள், நடனம், தெருக்கூத்து மற்றும் நாட்டுப்புற பாடல்கள் மூலமாக மழை நீர் சேகரித்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பொது இடங்களிலுள்ள சுவர்களில் நீர் பாதுகாப்பு மற்றும் நீர் மேலாண்மை குறித்து விளம்பரங்கள் செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதையடுத்து நீர் பாதுகாப்பு மற்றும் நீர் மேலாண்மை குறித்து பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு ஊர்வலத்தினை கொடியசைத்து தொடங்கி வைத்த கலெக்டர் விஜயலட்சுமி, பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். இதில் ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குனர் சுந்தர்ராஜன், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) பழனிசாமி, இணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் ஹேமசந்த் காந்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் கலையரசன் மற்றும் அலுவலர்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News