செய்திகள்

அவனியாபுரத்தில் தேமுதிக பிரமுகரிடம் ரூ.1½ லட்சம் பறிமுதல்

Published On 2019-05-18 12:14 GMT   |   Update On 2019-05-18 12:14 GMT
அவனியாபுரத்தில் தே.மு.தி.க. பிரமுகர் ஆவணம் இன்றி கொண்டு சென்ற ரூ.1½ லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் கைப்பற்றினர்.
மதுரை:

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்யப்படுவதை தடுக்கும் வகையில் பறக்கும் படையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

நேற்று பெருங்குடி சோதனை சாவடி அருகே பறக்கும்படை அதிகாரி மதுரைவீரன் தலைமையில் வாகன சோதனை நடத்தப்பட்டது. அப்போது வேகமாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி விசாரித்தனர்.

அதில் வந்தவர், அவனியாபுரம் காவேரி நகரைச் சேர்ந்த செந்தில் குமார் என்பதும், தே.மு.தி.க.வைச் சேர்ந்தவர் ரூ.1½ லட்சத்தை கொண்டு வந்ததும் தெரியவந்தது. அந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லை.

இதைத்தொடர்ந்து போலீசார் பணத்தை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அவனியாபுரம் பை-பாஸ் ரோடு பகுதியில் அனுமதியின்றி அ.தி.மு.க.பேனர் மற்றும் கட்சிக்கொடி வைத்ததோடு, பட்டாசுகளும் வெடிக்கப்பட்டதாக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் புகார் செய்தார். அதன் பேரில் அ.தி.மு.க. நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதேபோல் சப்-இன்ஸ்பெக்டர் அருண்பாண்டியன் ரோந்து சென்றபோது பெருங்குடி தேவர் சிலை அருகே தி.மு.க.வினர் அனுமதியின்றி பேனர் மற்றும் கட்சிக்கொடி வைத்து பட்டாசு வெடித்ததாக புகார் தெரிவித்தார். அதன் பேரிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தெற்குவாசல் மகால் ரோடு பகுதியில் உள்ள பள்ளி சுவற்றில் அனுமதியின்றி சுவரொட்டி ஒட்டியதாக பாண்டியன் கூட்டுறவு அண்ணா சங்கம் நிர்வாகிகள் மீது தெற்குவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Tags:    

Similar News