செய்திகள்

வேதாரண்யம் அருகே குடிநீர் கிடைக்காமல் கிராம மக்கள் அவதி

Published On 2019-05-15 11:06 GMT   |   Update On 2019-05-15 11:06 GMT
வேதாரண்யம் அருகே குடிநீர் கிடைக்காமல் கிராம மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

வேதாரண்யம்:

வேதாரண்யம் தாலுக்கா கள்ளிமேடு ஊராட்சியில் சுமார் 350 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு நிலத்தடி நீர் உப்பு தன்மையை அடைந்து விட்டது.

இதனால் இப்பகுதிக்கு கடந்த 25 ஆண்டுக்களுக்கு முன்பு அருகில் உள்ள கிராமமான தாமரைபுலத்தில் ஊராட்சி ஒன்றியத்தின் சார்பில் தனியாரிடம் இடம் வாங்கி கிணறு வைத்து அதிலிருந்து தண்ணீர் எடுத்து வழங்கப்பட்டு வந்தது.

மேலும் இந்த கிராமத்திற்கு அனைக்கரை கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலமும் தண்ணீர் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த ஆண்டு வீசிய கஜா புயலில் தாமரைப்புலத்திலிருந்து கள்ளிமேட்டிற்கு தண்ணீர் எடுப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த மின்இணைப்புகள் பாதிக்கப்பட்டது.

அதனை சீர் செய்வதற்கு அப்பகுதி மக்கள் விடவில்லை. எங்கள் பகுதியிலிருந்து தண்ணீர் எடுக்கக்கூடாது என கூறி தடுத்துவிட்டனர். இதனால் 25 ஆண்டுகளாக தாமரைப்புலத்திலிருந்து கள்ளிமேட்டிற்கு வழங்கிவந்த குடிநீர் வழங்கமுடியாத நிலை ஏற்பட்டது.

இதனால் அணைக்கரை கூட்டுகுடிநீர் திட்டத்தினை மட்டுமே நம்பி குடிநீர் பெறவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டன. கோடைகாலம் என்பதால் அணைக்கரை கூட்டு குடிநீர் திட்டத்திலிருந்து வாரத்திற்கு ஒரு முறையே தண்ணீர் வருகிறது.

அதுவும் குறைந்த அளவில் வருவதால் ஒரு வீட்டிற்கு ஒன்று அல்லது இரண்டு குடம் மட்டுமே பிடிக்கமுடிகிறது. இதனால் கள்ளிமேடு பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவிவருகிறது.

எனவே ஊராட்சி நிர்வாகம் தாமரைப் புலத்தில் உள்ள மின்இணைப்புகளை சரிசெய்து மீண்டும் அங்கிருந்து கள்ளிமேட்டிற்கு குடிநீர் வழங்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News