மனைவியுடன் தகராறு- அரசு ஊழியர் தீக்குளித்து பலி
பெரம்பூர்:
பெரியமேடு என்.எச். ரோட்டில் குடியிருப்பவர் புருஷோத்தமன் (38). வேப்பேரி அரசு கால்நடை மருத்துவ கல்லூரி ஊழியர். இவருடைய மனைவி பெயர் சோனியா (34). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கணவன்- மனைவி இடையே குடும்ப தகராறு இருந்து வந்தது.
இந்த நிலையில் நேற்று இரவு சோனியா அதே தெருவில் உள்ள தனது உறவினர் வீட்டுதிருமணத்துக்கு சென்று இருந்தார். புருசோத்தமன் அங்கு போய் மனைவி சோனியாவை வீட்டுக்கு வரும்படி அழைத்தார்.
சோனியா வர மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த புருசோத்தமன், தனது மோட்டார் சைக்கிளில் இருந்த பெட்ரோலை எடுத்து உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். தெருவில் அலறி துடித்தார். அவரது உடலில் பற்றி எரிந்த தீயை அணைத்து கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் இன்று காலை புருசோத்தமன் பரிதாபமாக உயிர் இழந்தார். அவரது உடலை கண்டு மனைவி, குழந்தைகள் கதறியது நெஞ்சை உருக்குவதாக இருந்தது. ஓட்டேரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.