செய்திகள்

காரனோடையில் கண்டெய்னர் லாரி மோதி தொழிலாளி பலி

Published On 2019-05-09 07:53 GMT   |   Update On 2019-05-09 07:53 GMT
காரனோடையில் கண்டெய்னர் லாரி மோதி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தை கண்டித்து பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
செங்குன்றம்:

சோழவரத்தை அடுத்த நெற்குன்றம் பள்ள சூரப்பட்டு பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 42). கூலி தொழிலாளி. இவர் நேற்று இரவு காரனோடை பஜாரில் வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்களை வாங்கிக் கொண்டு மோட்டார் சைக்கிளில் சென்றார்.

அப்போது அந்த சாலையில் வந்த கனரக வாகனமான கண்டெய்னர் லாரி அதி வேகமாக வந்து மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே ஏழுமலை பரிதாபமாக உயிர் இழந்தார்.

இந்த விபத்து கனரக வாகனம் நகருக்குள் வந்ததால் ஏற்பட்டுள்ளது என்பதை அறிந்த அப்பகுதி மக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தேசிய நெடுஞ்சாலையில் செல்லக்கூடிய லாரி நகருக்குள் அனுமதிக்கப்பட்டதை கண்டித்து 100-க்கும் மேற்பட்டவர்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து சோழவரம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். கனரக வாகனங்களை இனி அனுமதிக்க மாட்டோம் என்று உறுதி அளித்ததால் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

ஆனாலும் ஒரு மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்ற சாலை மறியலால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்படுகிறது.
Tags:    

Similar News