செய்திகள்

வானகரம் அருகே தண்ணீர் லாரியில் சிக்கி சிறுவன் பலி

Published On 2019-05-04 14:39 IST   |   Update On 2019-05-04 14:39:00 IST
வானகரம் அருகே தண்ணீர் லாரியில் சிக்கி சிறுவன் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போரூர்:

திருவேற்காடு செல்லியம்மன் நகரைச் சேர்ந்தவர் குமரேசன். மெக்கானிக். இவரது மனைவி கீதா.

இவர்களுக்கு தர்‌ஷன்(5), தியா(3) என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். தர்‌ஷன் தனியார் பள்ளியில் யூகேஜி வகுப்பு படித்து வந்தான்.

கீதா இன்று காலை மதுரவாயலில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக பைக்கில் தர்‌ஷன், தியா ஆகிய இருவரையும் ஏற்றிக்கொண்டு சென்றார்.

வானகரம் சிக்னல் அருகே வந்தபோது போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்ததால் கீதா தனது பைக்கை இடதுபுறம் சாலையை விட்டு இறங்கி ஓரமாக சென்றார். மீண்டும் சாலையில் ஏற முயன்றார் .

அப்போது மணலில் சறுக்கியதால் எதிர்பாராத விதமாக பைக்கில் இருந்து மூவரும் ரோட்டில் விழுந்தனர். இதில் சிறுவன் தர்‌ஷன் வலதுபுறம் ரோட்டில் விழுந்தான்.

அப்போது அவ்வழியே மதுரவாயல் நோக்கி வேகமாக வந்த தண்ணீர் லாரி சிறுவன் மீது ஏறி இறங்கியது இதில் சம்பவ இடத்திலேயே அவன் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தான். கீதா, மகள் தியா ஆகியோர் லேசான காயத்துடன் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினர். பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் லாரி டிரைவர் ஜெய்சிங் என்பவரை கைது செய்தனர்.

Similar News