செய்திகள்

குழந்தைகள் விற்பனை விவகாரம்: சிறப்பு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் - தினகரன் வலியுறுத்தல்

Published On 2019-04-28 10:31 GMT   |   Update On 2019-04-28 13:17 GMT
குழந்தைகள் விற்பனை விவகாரத்தில் சிறப்பு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தி உள்ளார். #TTVDinakaran #RasipuramNurse
சென்னை:

அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சட்டவிரோத குழந்தைகள் விற்பனை மற்றும் கடத்தல் பற்றி அடுத்தடுத்து வெளியாகிக் கொண்டிருக்கும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன.

ராசிபுரத்தில் குழந்தை விற்பனையில் ஈடுபட்டதாக விருப்ப ஓய்வு பெற்ற அரசு செவிலியர் மற்றும் அவரது கணவர் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதுவும் குழந்தை விற்பனை தொடர்பான ஆடியோ வெளியாகி தமிழகம் முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்திய பிறகே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பிறப்பு சான்றிதழ் போன்ற ஆவணங்களை அவர்கள் போலியாக தயாரித்திருப்பதும் அம்பலமாகி இருக்கிறது.

பிடிபட்டிருக்கும் குழந்தை விற்பனை கும்பலின் பின்னால் பெரிய சட்டவிரோத சங்கிலி பிணைப்பு இருப்பதாக வெளியாகும் தகவல் பொதுமக்களிடையே அச்சத்தையும், கவலையையும் ஏற்படுத்தி இருக்கிறது. இதில் உண்மை நிலையை மக்களுக்கு தெரியப்படுத்துவதும், முறையான விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருவதும் மிகவும் முக்கியம்.

சென்னை உயர்நீதிமன்றம் நேரடியாக இவ்விவகாரத்தில் தலையிட்டு குழந்தை விற்பனை மற்றும் கடத்தல் புகார்கள் பற்றி முழுமையான விசாரணை நடத்த சிறப்புக்குழு அமைக்க வேண்டும். அந்த விசாரணையை உயர்நீதிமன்றமே கண்காணிக்க வேண்டும்.

சென்னையில் வீடுகள் இன்றி சாலை ஓரங்களில் படுத்திருக்கும் குழந்தைகள் தொடர்ந்து கடத்தப்பட்டது குறித்த வழக்கில் பழனிசாமி அரசின் செயல்பாடுகளை கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் உயர்நீதிமன்றம் கடுமையாக விமர்சித்து இருந்ததை நினைவுப்படுத்த விரும்புகிறேன்.



நாட்டின் எதிர்காலம் குழந்தைகள். அவர்கள் கடத்தப்படுவதை தடுக்க தமிழக அரசு தவறி விட்டது. நீதிபதிகள் மற்றும் காவல் துறையினரின் குழந்தைகள் பாதுகாப்பாக இருந்தால் மட்டும் போதாது. இந்தியாவின் கடைசி குடிமகனின் குழந்தையும் பாதுகாப்பாக இருப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு, தமிழகத்தில் குழந்தை கடத்தலை முற்றிலுமாக தடுப்பதற்கான நடவடிக்கைகளை உயர்நீதிமன்றம் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

அப்போதுதான் குழந்தை கடத்தல் தடுப்பு சட்டத்தில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி செயல்படும் சமூக விரோத வலைப்பின்னலை அறுத்தெறிந்து அப்பாவி பெற்றோரின் குழந்தைகளைக் காப்பாற்ற முடியும். அவர்களும் இந்த சமூகத்தில் நிம்மதியாக வாழ்வதற்கான வாய்ப்பை உருவாக்கித் தரமுடியும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #TTVDinakaran #RasipuramNurse
Tags:    

Similar News