செய்திகள்

வருமான வரி பாக்கிக்காக ஜெயலலிதாவின் போயஸ்கார்டன் வீடு முடக்கப்பட்டது- சென்னை ஐகோர்ட்டில் தகவல்

Published On 2019-04-25 10:50 GMT   |   Update On 2019-04-25 10:50 GMT
வருமான வரி பாக்கிக்காக முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ்கார்டன் வீடு முடக்கப்பட்டது என்று சென்னை ஐகோர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #chennaihighcourt #jayalalithapoesgarden

சென்னை:

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் சொத்துகளை நிர்வகிக்க தனி நிர்வாகியை நியமிக்க கோரி சென்னை கே.கே.நகரை சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகி புகழேந்தி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

அதில் ஜெயலலிதாவிற்கு ரூ.913 கோடிக்கு மேல் சொத்துகள் இருப்பதாகவும், இவற்றை யார் நிர்வகிக்க வேண்டும் என ஜெயலலிதா உயில் இல்லாததால், ஐகோர்ட்டே நிர்வாகியை நியமிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீடு உள்ளிட்ட சொத்துக்களை முடக்கி வைத்துள்ளதாக வருமான வரித்துறை அறிக்கை தாக்கல் செய்தது.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் சுந்தரேஷ், சரவணன் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.


அப்போது, வருமான வரித்துறை துணை ஆணையர் சோபா பதில் மனு தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:-

2016 - 2017 ஆண்டுக்கான வருமான வரித்துறை கணக்குப்படி ஜெயலலிதாவிற்கு ரூ. 16.37 கோடி மதிப்பிலான நிலம், கார் உள்ளிட்ட சொத்துகளும், வங்கியில் ரூ.10 கோடி இருப்பும் உள்ளது.

1990-91 முதல் 2011-12 வரை ரூ.10.12 கோடி செல்வ வரி பாக்கி உள்ளது. 2005-06 முதல் 2011-12 வரை ரூ.6.62 கோடி வருமான வரி பாக்கி உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவின் போயஸ் தோட்டம் இல்லம், ஜதராபாத் வீடு உள்ளிட்ட 4 சொத்துகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது.

மேலும், சுமார் ரூ.1000 கோடி மதிப்புள்ள ஜெயலலிதாவின் சொத்துக்களை நிர்வகிக்க ஒரு நபரை நிர்வாகியாக நியமிக்க கோரி வழக்கு தொடர முடியாது. எனவே, இந்த வழக்கே விசாரணைக்கு உகந்தது அல்ல’ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கின் இறுதி விசாரணையை வருகிற ஜூன் 6-ந்தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். #chennaihighcourt #jayalalithapoesgarden

Tags:    

Similar News