செய்திகள்

40 சதவீத ஆசிரியர்கள், ஊழியர்கள் ஓட்டு போடவில்லை

Published On 2019-04-24 07:40 GMT   |   Update On 2019-04-24 07:40 GMT
40 சதவீத ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் தபால் ஓட்டை இன்னும் பதிவு செய்யவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. #LokSabhaElections2019
சென்னை:

தமிழ்நாட்டில் 38 பாராளுமன்ற தொகுதி மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த 18-ந்தேதி நடந்து முடிந்தது. தேர்தல் பணியில் 3½ லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஈடுபட்டனர்.

இவர்கள் ஓட்டு போடுவதற்கு தபால் ஓட்டு வழங்கப்படுவது வழக்கம். உயர் அதிகாரியிடம் கையெழுத்து பெற்று தபால் ஓட்டுக்கள் போடுவார்கள். அல்லது தபாலில் அதை அனுப்பி வைப்பார்கள். இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு தேர்தலுக்கு முன்பே தபால் ஓட்டு படிவம் வழங்கப்பட்டது.

ஆர்வம் மிக்க ஊழியர்கள் உடனே அதை பூர்த்தி செய்து உயர் அதிகாரியிடம் கையெழுத்து வாங்கி தபால் ஓட்டுகளை அனுப்பி விட்டனர். ஆனால் இன்னும் சில ஊழியர்கள் தபால் ஓட்டை போடாமல் கையில் வைத்துள்ளனர். 40 சதவீத அரசு ஊழியர்கள் தபால் ஓட்டை இன்னும் பதிவு செய்யவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்து ஜாக்டோ-ஜியோ அமைப்பை சேர்ந்த அன்பரசிடம் கேட்டதற்கு அவர் கூறியதாவது:-

தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தபால் ஓட்டு போடுவதற்கான கால அவகாசம் ஓட்டு எண்ணும் நாள்வரை அதாவது மே 23-ந்தேதி வரை உள்ளது. இந்த இடைப்பட்ட நாட்களுக்குள் எப்போது வேண்டுமானாலும் தபால் வாக்கை பதிவு செய்யலாம்.

இதற்காக 3 கடிதம் அரசு ஊழியர்களிடம் இருக்கும். வாக்குசீட்டு, தேர்தல் பணிக்கான கடிதம், அதிகாரியின் கையெழுத்திட்ட படிவம் இவற்றை இணைத்து வாக்களிக்க வேண்டும்.

தமிழகத்தில் வாக்குப்பதிவு முடிந்த பிறகு 4 நாட்கள் தொடர் விடுமுறை வந்ததால் அரசு ஊழியர்கள் சிலர் சொந்த ஊருக்கு சென்று விட்டனர். இதனால் வாக்களிக்காமல் இருந்திருக்கலாம். ஆனாலும் இன்னும் கால அவகாசம் இருப்பதால் வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
 
இவ்வாறு அவர் கூறினார். #LokSabhaElections2019

Tags:    

Similar News