செய்திகள்

பல மாதங்களுக்கு பிறகு வைகை அணையில் நீர் வரத்து தொடக்கம்

Published On 2019-04-23 06:28 GMT   |   Update On 2019-04-23 06:28 GMT
கோடை மழை காரணமாக வைகை அணையில் பல மாதங்களுக்கு பிறகு நீர் வரத்து வரத் தொடங்கியுள்ளது. #VaigaiDam
கூடலூர்:

தேனி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கோடை மழை தீவிரமாக பெய்து வருகிறது. நேற்று மாவட்டம் முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்தது. இதனால் கிணறுகள் மற்றும் தோட்டங்களில் உள்ள ஆழ்துளை குழாய்களின் நீர் மட்டம் உயர்ந்துள்ளது.

வைகை அணையில் கடந்த 2 மாதமாக நீர் வரத்து வராமல் இருந்தது. தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக 280 கன அடி தண்ணீர் வருகிறது. அணையின் நீர் மட்டம் 38.43 அடியாக உள்ளது. அணையில் இருந்து 60 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

பெரியாறு அணையின் நீர் மட்டம் 112.30 அடி. அணைக்கு வரும் 100 கன அடி தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 35.40 அடி. வரத்து 175 கன அடி. சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 94.95 அடி. வரத்து 18 கன அடி. திறப்பு 3 கன அடி.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் 18, அரண்மனைப்புதூர் 15.2, போடி 15.4, கூடலூர் 53, மஞ்சளாறு 73, பெரியகுளம் 63, சோத்துப்பாறை 48, உத்தமபாளையம் 31.6, வைகை அணை 31.2, வீரபாண்டி 37 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

இதே போல பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதியான பெரியாறில் 2.6, தேக்கடியில் 5.6 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல் 8.2, கொடைக்கானல் 37.6, பழனி 10.5, ஒட்டன்சத்திரம் 32.5, கொடைக்கானல் போர்ட் கிளப் 40 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் பங்குனி மாத கடைசியில் விவசாயிகள் மானாவாரி விதைப்பை தொடங்குவது வழக்கம். ஆனால் இந்த முறை கோடை மழை தாமதமாக பெய்து வருவதால் தற்போது நிலக்கடலை, எள், மொச்சை ஆகிய பயிர்கள் விதைக்கும் பணியில் ஆர்வம் காட்டி வருகின்றனர். #VaigaiDam

Tags:    

Similar News