செய்திகள்

இரணியல் அருகே டாஸ்மாக் கடையை உடைத்து மது பாட்டில்கள் கொள்ளை

Published On 2019-04-22 15:08 GMT   |   Update On 2019-04-22 15:08 GMT
இரணியல் அருகே டாஸ்மாக் கடையை உடைத்து மது பாட்டில்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நாகர்கோவில்:

இரணியலை அடுத்த கீழ மணியன்குழியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. சம்பவத்தன்று இரவு வியாபாரத்தை முடித்து விட்டு ஊழியர்கள் கடையை பூட்டிவிட்டு சென்றனர். நேற்று மதியம் மீண்டும் கடையை திறப்பதற்காக ஊழியர்கள் வந்தனர். அப்போது கடையின் ‌ஷட்டர் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் கடையின் மேற்பார்வையாளர் மைக்கேல் ராஜனுக்கு தகவல் கொடுத்தனர். அங்கு விரைந்து வந்த அவர் சம்பவம் குறித்து இரணியல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

சப்-இன்ஸ்பெக்டர் மாரியப்பன், சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் சுப்பிர மணியன் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் கடையினுள் சென்று பார்த்த போது அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த 12 பீர் பாட்டில்கள், 12 ரம் பாட்டில்கள் உள்பட 43 மது பாட்டில்களை கொள்ளையடித்துச் சென்றிருப்பது தெரியவந்தது.

மேலும் அங்கு இருந்த சி.சி.டி.வி. கேமிரா, மாணிட்டர், சில்லறை பணமும் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் பூட்டு உடைக்கப்பட்ட இடம் மற்றும் மது பாட்டில்கள் இருந்த இடங்களில் கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும் மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. அது கடையில் இருந்து சிறிது தூரம் ஓடி நின்றது.

போலீசார் அந்த பகுதியில் தீவிர சோதனையிலும் ஈடுபட்டனர். சந்தேகப்படும் படியாக சுற்றித்திரிந்த வாலிபர்களையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். கடையில் இருந்த கண்காணிப்பு கேமிராவை கொள்ளையர்கள் திருடிச் சென்றதால் அந்த பகுதியில் கண்காணிப்பு கேமிராக்கள் வேறு எங்கும் உள்ளதா? எனவும் ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்த கொள்ளைச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News