செய்திகள்

ஆந்திராவில் இருந்து மதுபாட்டில்கள் கடத்தி வந்த 3 வாலிபர்கள் கைது

Published On 2019-04-15 06:34 GMT   |   Update On 2019-04-15 06:34 GMT
ஆந்திராவில் இருந்து மதுபாட்டில்கள் கடத்தி வந்த 3 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொன்னேரி:

பொன்னேரியை அடுத்த பழவேற்காட்டில் தேர்தல் பறக்கும்படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, ஒரு மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர். அவர்களை தேர்தல் பறக்கும் படை அதிகாரி மணிமேகலை தலைமையில் திருப்பாலைவனம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பால கிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் தடுத்து நிறுத்தினார்கள்.ஆனால் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் நிற்கவில்லை. அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். அவர்களை பறக்கும் படையினர் விரட்டிச்சென்று மடக்கிப்பிடித்தனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்களிடம் 2 பைகளில் மதுபாட்டில்கள் இருந்தன. விசாரணையில் அவை ஆந்திராவில் இருந்து படகு மூலம் கடத்தி வரப்பட்டவை என்பது தெரிய வந்தது.

அவர்களிடம் 10 மதுப்பாட்டில்கள் இருந்தன. அவற்றை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

விசாரணையில் மது பாட்டில்களுடன் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் அருண் (31), சுந்தர்ராஜன் (32) என்பது தெரியவந்தது. 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அருண் எண்ணூர் காட்டாங்குப்பத்தையும், சுந்தர்ராஜன் எர்ணாவூரையும் சேர்ந்தவர்.

கைதானவர்களுக்கு மதுகடத்தும் கும்பலுடன் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து திருப்பாலைவனம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருவள்ளூர் கலால் வட்டாட்சியர் சாந்தி தலைமையிலான பறக்கும் படையினர் சின்னநாகபூண்டி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை சோதனை செய்தனர்.

காரின் உள்ளே 240 மதுபான பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அதில் வந்த திருவண்ணாமலை பகுதியை சேர்ந்த மகேஸ்வரன் கைது செய்யப்பட்டான். ஆர்.கே. பேட்டை கலால் போலீசிடம் அவர் ஒப்படைக்கப்பட்டார்.

Tags:    

Similar News