செய்திகள்

2 மகள்களுடன் வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்த பெண் காதல் திருமணம் செய்தவர்

Published On 2019-03-29 18:42 IST   |   Update On 2019-03-29 18:42:00 IST
கணவருடன் ஏற்பட்ட தகராறில் 2 மகள்களுடன் வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்த பெண் காதல் திருமணம் செய்தவர் என்பது தெரியவந்துள்ளது.

ஈரோடு:

ஈரோடு வளையகார வீதி, குப்பிபாலம் அருகே காலிங்கராயன் வாய்க்காலில் ஒரு பெண் உள்பட 3 பேரின் சடலங்கள் மிதந்து வந்ததாக ஈரோடு டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் அந்த பெண் தனது இரண்டு குழந்தைகளையும் துணியால் உடலில் கட்டியபடி வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது ஆனால் இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியாமல் இருந்தது.

இந்நிலையில் தற்போது தற்கொலை செய்து கொண்டவர்களின் அடையாளம் மற்றும் அவர்களின் பற்றி விவரம் தெரிய வந்துள்ளது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் கள்ளக்குறிச்சி சாலையைச் சேர்ந்த மணிகண்டன் மனைவி தமிழ்செல்வி (வயது 30) இவர்களது மகள்கள் துர்கா ஸ்ரீ, தானுஸ்ரீ என தெரியவந்தது.

மணிகண்டன் எலக்ட்ரீ‘ஷியனாக வேலை பார்த்து வருகிறார்.

தமிழ்செல்வியின் சொந்த ஊர் ஈரோடு மாவட்டம் நம்பியூர் ஆகும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு மணிகண்டனும் தமிழ்ச்செல்வியும் திருப்பூர் பனியன் கம்பெனியில் பணியாற்றிய போது பழக்கம் ஏற்பட்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதேபோன்று கடந்த 26-ஆம் தேதி மீண்டும் இருவருக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த தமிழ் செல்வி தனது இரண்டு பெண் குழந்தைகளை அழைத்துக் கொண்டு தனது பெற்றோர் வீட்டுக்கு செல்வதற்தாக ஈரோடு வந்தார்.

அப்போது கருங்கல் பாளையம் வண்டியூரான் கோவில் பஸ் நிறுத்தத்தில் தனது குழந்தைகளுடன் இறங்கியுள்ளார் பின்னர் அப்பகுதியில் உள்ள காலிங்கராயன் வாய்க்காலில் குழந்தைகளுடன் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் நேற்று மாலை தமிழ்ச்செல்வியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஈரோடு வந்தனர்.

அவர்களிடம் ஈரோடு டவுன் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து மணிகண்டனுக்கும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News