செய்திகள்

கஞ்சா விற்று கைது செய்யப்பட்ட லிபியா நாட்டு மாணவர் புழல் ஜெயிலில் அடைப்பு

Published On 2019-03-25 12:19 GMT   |   Update On 2019-03-25 12:19 GMT
ஆரோவில் அருகே கஞ்சா விற்று கைது செய்யப்பட்ட லிபியா நாட்டு மாணவர் செஞ்சி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சென்னை புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
சேதராப்பட்டு:

புதுவையை அடுத்த தமிழக பகுதியான ஆரோவில் உள்ளது. சர்வதேச நகரமான இங்கு பல்வேறு வெளிநாட்டினர் வசித்து வருகின்றனர். மேலும் தினந்தோறும் இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகளும் வந்து செல்கின்றனர்.

இதற்கிடையே ஆரோவில் பகுதியில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கும், மாணவர்களுக்கும் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக ஆரோவில் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீசார் ரகசியமாக கண்காணித்து வந்தனர். அப்போது பெரியமுதலியார் சாவடியில் ஒரு வீட்டில் வெளிநாட்டு மாணவர் ஒருவர் கஞ்சா விற்று வந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அந்த மாணவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் லிபியா நாட்டை சேர்ந்த ‌ஷபீது (வயது23) என்பதும் இவர் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தில் எம்.ஏ. படித்து வந்தது தெரியவந்தது.

மேலும் விசாரணையில் அவர் பெரிய முதலியார் சாவடியில் வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி கஞ்சாவை திருவண்ணாமலை மற்றும் பெங்களூரில் இருந்து மொத்தமாக வாங்கி வந்து வெளிநாட்டு மாணவர்களுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் விற்று வந்தது தெரியவந்தது. இதையடுத்து ‌ஷபீதுவை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 600 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர் செஞ்சி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சென்னை புழல் ஜெயிலில் அடைத்தனர்.

‌ஷபீதுவின் பாஸ்போர்ட் காலாவதியான பின்னரும் அவர் தொடர்ந்து பெரியமுதலியார் சாவடியில் தங்கி சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வந்ததால் இதுபற்றி லிபியா நாட்டு தூதரகத்துக்கு தகவல் அளித்து உள்ளனர். #tamilnews
Tags:    

Similar News