செய்திகள்

ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் வரத்து குறைவால் தக்காளி விலை உயர்வு

Published On 2019-03-23 18:02 GMT   |   Update On 2019-03-23 18:02 GMT
ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் வரத்து குறைவால் தக்காளி விலை உயர்ந்துள்ளது.

ஒட்டன்சத்திரம்:

ஒட்டன்சத்திரம் அருகே இடையகோட்டை, மூலச்சத்திரம், அம்பிளிக்கை, விருப்பாச்சி, கள்ளிமந்தயம் உள்ளிட்ட பகுதிகளில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டு ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்படுகிறது. இங்கிருந்து தூத்துக்குடி, நெல்லை, மதுரை, பட்டுக்கோட்டை உள்பட பல்வேறு பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

மேலும் ஏப்ரல், மே காலங்களில் பாச்சலூர், வடகாடு, பெத்தேல்புரம், பால்கடை உள்ளிட்ட மலை கிராமங்களில் இருந்து நாட்டுத்தக்காளி அதிகளவில் வரத்து இருக்கும். இந்த தக்காளிகள் சுவை மிகுந்து காணப்படுவதால் பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கிச்செல்கின்றனர்.

கடந்த ஜனவரி மாதம் 14 கிலோ கொண்ட பெட்டி ரூ.50க்கே விற்பனையானது. விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்ததால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

வழக்கமாக ஒட்டன் சத்திரம் மார்க்கெட்டுக்கு 10ஆயிரம் பெட்டிகள் தக்காளி வரத்து இருக்கும். ஆனால் கடந்த சில நாட்களாக 1000 பெட்டிகள் மட்டுமே வருகின்றன. இதனால் விலை உயர்ந்துள்ளது. 14 கிலோ கொண்ட தக்காளி பெட்டி ரூ.200 வரை விற்பனை செய்யப்படுகிறது.

ஜூன் மாதத்தில் பெங்களூர் பகுதியில் இருந்து தக்காளி இறக்குமதி செய்யப்படுகிறது. ஆனால் இந்த தக்காளிகள் நாட்டுத்தக்காளி போல் சுவை இருப்பதில்லை. இருந்தபோதும் விலை 14 கிலோ பெட்டிக்கு ரூ.400 வரை விற்பனையானது.

எனவே வரும் காலங்களில் தக்காளி, பச்சை மிளகாய், வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் விலை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு பருவமழை கைகொடுத்தால் நல்ல விளைச்சல் பார்க்கலாம் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.

Tags:    

Similar News