செய்திகள்

சிவகங்கை அதிமுக நிர்வாகி கொலை வழக்கில் 11 பேரின் 3 ஆயுள் தண்டனையை உறுதி செய்தது ஐகோர்ட்

Published On 2019-03-22 10:24 GMT   |   Update On 2019-03-22 10:24 GMT
சிவகங்கை அதிமுக நிர்வாகி கதிரேசன் கொலை வழக்கில் 11 பேருக்கு கீழ் நீதிமன்றம் விதித்த 3 ஆயுள் தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. #MadrasHighCourt #SivagangaMurderCase
சென்னை:

சிவகங்கை மாவட்ட அதிமுக மாணவரணி செயலாளர் கதிரேசன், அவரது மகன் பிரசன்னா, கார் டிரைவர் பூமிநாதன் ஆகியோர் கடந்த 2012ம் ஆண்டு நவம்பர் மாதம் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக முன்னாள் ஊராட்சி தலைவர் அர்ச்சுனன் மற்றும் அவரது மகன்கள் உள்ளிட்ட 21 பேர் கைது செய்யப்பட்டனர். விசாரணையில், தேர்தல் முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருப்பது தெரியவந்தது.

இந்த வழக்கை விசாரித்த சிவகங்கை அமர்வு நீதிமன்றம் 2015-ல் தீர்ப்பு வழங்கியது. அப்போது, 11 பேர் மீதான குற்றச்சாட்டு நிரூபணமானதால், அவர்களுக்கு தலா 3 ஆயுள் தண்டனை விதித்தது. 10 பேர் விடுவிக்கப்பட்டனர்.

தண்டனையை எதிர்த்து 11 பேர் சார்பிலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு வழக்கின் வாதப் பிரதிவாதங்கள் முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது, குற்றவாளிகள் தரப்பு வாதங்களை நிராகரித்த நீதிமன்றம், அவர்களுக்கு கீழ் நீதிமன்றம் விதித்த 3 ஆயுள் தண்டனையை உறுதி செய்தது. #MadrasHighCourt #SivagangaMurderCase
Tags:    

Similar News