2025 REWIND: கிரிஜா வியாஸ் முதல் சிவராஜ் பாட்டீல் வரை! நடப்பு ஆண்டில் மரணமடைந்த முக்கிய தலைவர்கள்
- கோவா மாநில முன்னாள் முதல்வரான ரவி நாயக் கடந்த அக்டோபர் மாதம் 29ம் தேதி மரணமடைந்தார்.
- காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான யோகேந்திர மக்வானா மரணமடைந்தார்.
இந்தியாவில் 2025ம் ஆண்டில் மரணமடைந்த முக்கிய அரசியல் தலைவர்கள் குறித்து இங்கே பார்க்கலாம்.
* மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான கிரிஜா வியாஸ் கடந்த மே மாதம் 10ம் தேதி அன்று மரணமடைந்தார்.
* கோவா மாநில முன்னாள் முதல்வரான ரவி நாயக் கடந்த அக்டோபர் மாதம் 29ம் தேதி மரணமடைந்தார்.
* அதே நாளில், காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான யோகேந்திர மக்வானா மரணமடைந்தார்.
* பாஜக மூத்த தலைவரும், குஜராத் மாநில முன்னாள் முதல்வருமான ரவி விஜய் ரூபானி மரணமடைந்தார்.
*மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் மக்களவை சபாநாயகருமான சிவராஜ் பாட்டீல் டிசம்பர் 12 (இன்று) மரணமடைந்தார்.
இந்த ஆண்டில் மரணமடைந்த இந்த 5 முக்கிய தலைவர்கள் குறித்து தற்போது விரிவாக பார்க்கலாம்..
கிரிஜா வியாஸ்:
கிரிஜா வியாஸ் இந்திய அரசியலில், குறிப்பாகப் பெண்கள் அதிகாரம் மற்றும் சமூக மேம்பாட்டில் முக்கியப் பங்காற்றியவர். அவர் அரசியல்வாதி மட்டுமல்ல, ஒரு புகழ்பெற்ற கவிஞரும், எழுத்தாளரும் கூட.
1946ம் ஆண்டில் ராஜஸ்தானில் பிறந்த இவர் 1991 முதல் 1993 வரை பி.வி.நரசிம்ம ராவ் அமைச்சரவையில் தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறைத் துணை அமைச்சராக இருந்தார்.
ஜூன் 2013 முதல் மே 2014 வரை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சராக பதவி வகித்தார்.
முன்னதாக, 2005 முதல் 2011 வரை தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவராக இரண்டு முறை இந்தப் பொறுப்பை வகித்துள்ளார். பெண்கள் உரிமைகளுக்கான கொள்கை சீர்திருத்தங்களை முன்னெடுப்பதில் முக்கியப் பங்காற்றினார்.
கிரிஜா வியாஸ் அவர்கள் மே 1, 2025 அன்று, தனது ஜெய்ப்பூர் இல்லத்தில் பூஜையின் போது ஏற்பட்ட தீ விபத்தில் பலத்த காயமடைந்து, சிகிச்சைப் பலனின்றி காலமானார்.
ரவி நாயக்
கோவா மாநிலத்தின் முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் முதல்வருமானவர் ரவி எஸ். நாயக். 1991 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 25 ஆம் தேதி முதல் 1994 ஆம் ஆண்டு மே மாதம் 14 ஆம் தேதி வரை அவர் கோவா மாநிலத்தின் முதலமைச்சராகப் பணியாற்றினார்.
அவர் பதவியில் இருந்த காலத்தில், மாநிலத்தின் உள்கட்டமைப்பு மற்றும் நிர்வாகச் சீர்திருத்தங்களில் கவனம் செலுத்தினார். ரவி நாயக் அவர்கள் முதலமைச்சர் பதவிக்கு வருவதற்கு முன்பும் பின்பும் பலமுறை கோவாவின் துணை முதலமைச்சராகப் (Deputy Chief Minister) பணியாற்றியுள்ளார். கோவா சட்டமன்றத்தின் சபாநாயகராகவும் (Speaker) இருந்துள்ளார்.
கோவாவின் போண்டா சட்டமன்றத் தொகுதியில் இருந்து பலமுறை தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அவர் காங்கிரஸ் கட்சியில் நீண்ட காலம் இருந்தாலும், அரசியல் சூழல் காரணமாகக் கட்சி மாறுதல்களையும் சந்தித்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் ரவி எஸ். நாயக் அவர்கள் அக்டோபர் 29, 2025 அன்று தனது 79வது வயதில் காலமானார்.
யோகேந்திர மக்வானா
குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த யோகேந்திர மக்வானா, நீண்ட காலம் நாடாளுமன்ற உறுப்பினராகவும், இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி அமைச்சரவைகளில் பல்வேறு முக்கிய மத்திய அமைச்சகங்களில் பணியாற்றி உள்ளார்.
1980கள் மற்றும் 1990களின் முற்பகுதியில் இவர் நிதித் துறை, உள்துறை, வேளாண்மைத் துறை, சுகாதாரத் துறைகளில் மத்திய அமைச்சராக பணியாற்றியுள்ளார்.
குஜராத் மாநிலத்தில் இருந்து பலமுறை மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு, நீண்ட காலம் மத்திய அரசில் பணியாற்றி, முக்கியக் கொள்கை முடிவுகளில் பங்களித்துள்ளார்.சமூகத்தின் விளிம்பு நிலையில் உள்ள மக்களின் உரிமை மற்றும் மேம்பாட்டிற்காகத் தொடர்ந்து குரல் கொடுத்தவர்.
மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான யோகேந்திர மக்வானா அவர்கள் அக்டோபர் 29, 2025 அன்று, தனது 92வது வயதில் காலமானார்.
விஜய் ரூபானி
பாஜக மூத்த தலைவரும், குஜராத் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும் ஆனவர் விஜய் ரூபானி. ஆகஸ்ட் 2016 முதல் செப்டம்பர் 2021 வரை குஜராத் முதலமைச்சராக இருந்தார். குஜராத் பாஜகவின் மாநிலத் தலைவராகப் பணியாற்றியுள்ளார்.2014 முதல் 2016 வரை குஜராத் மாநில அரசில் போக்குவரத்து மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சராகப் பணியாற்றினார்.
2006 ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டு வரை நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை உறுப்பினராகப் பணியாற்றினார். அவர் ராஜ்கோட் மாநகராட்சியின் மேயராகவும் (Mayor) நீண்ட காலம் பணியாற்றியுள்ளார்.
முன்னாள் குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி அவர்கள் ஜூன் 27, 2025 அன்று, தனது 68வது வயதில் அகமதாபாத் விமான விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
சிவராஜ் பாட்டீல்
முன்னாள் மத்திய அமைச்சரும், மக்களவையின் முன்னாள் சபாநாயகருமான சிவராஜ் விஷ்வநாத் பாட்டீல், தேசிய காங்கிரஸின் மூத்த தலைவர் ஆவார்.தனது நீண்ட அரசியல் வாழ்க்கையில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார்.
1991 முதல் 1996 வரை மக்களவை சபாநாயகர். 2004 முதல் 2008 வரை மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில், மத்திய உள்துறை அமைச்சராக இருந்தார்.
மும்பையில் நவம்பர் 26, 2008 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பிறகு, அவர் தார்மீகப் பொறுப்பேற்றுத் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி மற்றும் பி. வி. நரசிம்ம ராவ் அமைச்சரவைகளில் இவர், பாதுகாப்பு, மக்களவை சபாநாயகர், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், அணுசக்தி மற்றும் விண்வெளித்துறைகளில் மத்திய அமைச்சராகப் பணியாற்றியுள்ளார்.
2010 முதல் 2015 வரை பஞ்சாப் மாநில ஆளுநராகவும் மற்றும் சண்டிகரின் நிர்வாகியாகவும் பணியாற்றினார். சிவராஜ் பாட்டீல் தனது 90-வது வயதில் டிசம்பர் 12, 2025 (இன்று ) அன்று காலமானார்.