செய்திகள்

திமுக தேர்தல் அறிக்கையில் நிறைவேறாத வாக்குறுதிகள் - தமிழிசை சவுந்தரராஜன் குற்றச்சாட்டு

Published On 2019-03-20 07:58 GMT   |   Update On 2019-03-20 07:58 GMT
நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை வழங்கி தி.மு.க. வானத்தில் கோட்டை கட்டுகிறது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை குற்றம்சாட்டியுள்ளார். #TamilisaiSoundararajan
ஆலந்தூர்:

தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:-

தமிழகத்தில் பா.ஜனதா சார்பில் போட்டியிடும் உத்தேச வேட்பாளர்கள் பட்டியலை டெல்லி கொண்டு சென்றேன். போட்டியிடுவோர் பெயர்கள் உறுதி செய்யப்பட்டு விட்டது. பா.ஜனதா மத்திய தலைமை தேர்தல் குழு பெயர் பட்டியலை இன்று வெளியிடும். அதில் பெண் வேட்பாளர் பெயரும் இடம் பெறும்.

அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி வெற்றிக் கூட்டணி. தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி பெற்றி பெறாது. இதை தேர்தல் முடிவுகள் தெரிவிக்கும்.

தி.மு.க. தேர்தல் அறிக்கையில் நிறைவேறாத வாக்குறுதிகள் அளிக்கப்பட்டு உள்ளன. மாணவர்களுக்கு ரெயிலில் இலவச பாஸ் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு கொடுக்க வேண்டியதை தி.மு.க. தலைவர் ஸ்டாலின் எப்படி கொடுக்க முடியும்.



ஈழத் தமிழர் பிரச்சினைக்கு தி.மு.க.வும், மத்திய காங்கிரஸ் அரசும் என்ன செய்தன. அதை தி.மு.க. தீர்க்கும் என்பது வெற்று வாக்குறுதி. நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம், தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு என்று கூறப்பட்டுள்ளது.

தற்போது அனைத்து பிரிவினருக்கும் இட ஒதுக்கீடு வழங்கி இருப்பது மத்திய பா.ஜனதா அரசு. நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை வழங்கி தி.மு.க. வானத்தில் கோட்டை கட்டுகிறது.

அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ள அனைத்து திட்டங்களும் மத்திய அரசிடம் கேட்டுப்பெறுவோம் என்று கூறப்பட்டுள்ளது. மாநில அரசின் கோரிக்கையை மத்திய அரசு தான் நிறைவேற்ற முடியும். எனவே அ.தி.மு.க.வின் வாக்குறுதிகள் நிறைவேறும்.

காங்கிரஸ் நீண்ட காலமாக ஆட்சி செய்தது. 1971-ம் ஆண்டிலேயே வறுமையை ஒழிக்கப்போவதாக இந்திரா காந்தி கூறினார். ஆனால் அவர்கள் ஆட்சியை விட்டு போகும் வரை வறுமையை ஒழிக்கவில்லை.

பா.ஜனதா ஆட்சிக்கு வந்தபிறகுதான் வறுமை ஒழிப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளது. நீட் தேர்வை தி.மு.க. விமர்சிக்கிறது. ஆனால், இந்த தேர்வில் தமிழக மாணவர்கள் தான் அதிக எண்ணிக்கையில் வெற்றி பெற்று இருக்கிறார்கள்.

எனவே, தி.மு.க. தேர்தல் அறிக்கை மக்களிடம் எடுபடாது. அ.தி.மு.க.- பா.ஜனதா கூட்டணி தான் மக்கள் மனதில் இடம் பிடிக்கும்.

இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் கூறினார். #TamilisaiSoundararajan
Tags:    

Similar News