டி20 உலக கோப்பையில் வங்கதேசம் பங்கேற்குமா? கேப்டன் லிட்டன்தாஸ் பதில்
- டி20 உலகக் கோப்பையில் பங்கேற்பது குறித்து இன்றுக்குள் முடிவு எடுக்க வங்கதேச கிரிக்கெட் வாரியத்துக்கு ஐ.சி.சி. கெடு விதித்து இருந்தது.
- மறுக்கும் பட்சத்தில் வங்கதேசத்துக்கு பதிலாக ஸ்காட்லாந்து இடம்பெறும் என்று ஐசிசி எச்சரித்தது.
டாக்கா:
இந்தியாவில் நடைபெறும் 20 ஓவர் உலகக் கோப்பையில் பங்கேற்பது குறித்து இன்றுக்குள் முடிவு எடுக்க வங்கதேச கிரிக்கெட் வாரியத்துக்கு ஐ.சி.சி. (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) கெடு விதித்து இருந்தது.
இந்தியாவில் விளையாட மறுக்கும் பட்சத்தில் தரவரிசை அடிப்படையில் வங்கதேசத்துக்கு பதிலாக மாற்று அணியாக ஸ்காட்லாந்து இடம்பெறும் என்றும் எச்சரித்தது.
இதைத் தொடர்ந்து ஐ.சி.சி.யின் அழுத்தத்துக்கு அடிபணிய மாட்டோம் என்று வங்கதேச அரசின் விளையாட்டுத் துறை ஆலோசகர் ஆசிப் நஸ்ருல் தெரிவித்தார்.
இந்தநிலையில் 20 ஓவர் உலகக் கோப்பையில் வங்கதேசம் பங்கேற்குமா? என்று கேப்டன் லிட்டன் தாசிடம் கேட்கப்பட்டது. சர்ச்சை தொடர்பான கேள்விக்கு பதில் அளிப்பது தனக்கு பாதுகாப்பானது அல்ல என்று அவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக லிட்டன்தாஸ் கூறியதாவது:-
நாங்கள் உலகக்கோப்பையில் விளையாட போகிறோமா என்பது உங்களுக்கு (நிருபர்கள்) உறுதியாக தெரியுமா. என் தரப்பில் உறுதியாக தெரியவில்லை. அனைவருக்கும் நிச்சயமற்ற நிலைதான். இந்த சமயத்தில் முழு வங்கதேசமும் நிச்சயமற்ற நிலையில் இருப்பதாக நான் நினைக்கிறேன்.
நீங்கள் என்ன கேள்வி கேட்கப்போகிறீர்கள் என்று எனக்கு புரிகிறது. அது எனக்கு பாதுகாப்பானது அல்ல. பதில் இல்லை.
இவ்வாறு லிட்டன்தாஸ் கூறியுள்ளார்.
இதற்கிடையே வங்கதேசத்தின் நிலைப்பாட்டிற்கு ஆதரவு தெரிவித்து ஐ.சி.சி.க்கு பாகிஸ்தான் கிரிக் கெட் வாரியம் கடிதம் எழுதியுள்ளது.