செய்திகள்

நிலத்தகராறில் திமுக பிரமுகர் மீது தாக்குதல் - போலீசார் விசாரணை

Published On 2019-03-16 14:37 GMT   |   Update On 2019-03-16 14:37 GMT
மயிலாடுதுறை அருகே நிலத்தகராறில் திமுக பிரமுகர் மீது தாக்குதல் நடத்திய தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தரங்கம்பாடி:

நாகை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த வடகரை பெரிய மேல்தெருவைச் சேர்ந்த முகமது சித்திக் மகன் அப்துல்ஜலீல், தி.மு.க. பிரமுகர். இவரது வயல் அருகில் பாரூக் என்பவருக்கு சொந்தமான வயல் உள்ளது. இங்கு அரங்ககுடியை சேர்ந்த அப்துல் காதர் மகன் முகமது காசிம் என்பவர் வீட்டு மனைகளை உருவாக்கி உள்ளார். அவர் அப்துல் ஜலீலுக்கு சொந்தமான வயலுக்கு வழியில்லாத வகையில் வீட்டுமனை அமைத்ததால் அப்துல் ஜலீல் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முகமது காசிம் மயிலாடுதுறை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த நிலையில் அப்துல் ஜலீல் தனது தரப்பில் வாதாட வக்கீலை சந்தித்து பேசி அவரிடம் வழக்குக்கு உரிய இடத்தை காட்ட நேற்று மாலை அழைத்து சென்றுள்ளார். இதுபற்றி அறிந்த முகமது காசிம், அவரது மகன் அனீஸ் ஆகியோர் வாக்குவாதம் செய்து அவரை ஆயுதங்களால் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் தலையில் பலத்த காயமடைந்த அப்துல் ஜலீல் மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையே முகமது காசிம், அவரது மகன் அனீசும் தங்களை அப்துல் ஜலீல் தாக்கியதாக கூறி மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.

இந்த மோதல் குறித்து இருதரப்பினரும் செம்பனார் கோவில் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் மணிமாறன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் மயிலாடுதுறை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews

Tags:    

Similar News