செய்திகள்

ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க பா.ம.க. ஆதரவு அளிக்கும் - ராமதாஸ், அன்புமணி பேட்டி

Published On 2019-03-16 01:29 GMT   |   Update On 2019-03-16 01:29 GMT
ஜெயலலிதாவுக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்குவதற்கான கோரிக்கையை பா.ம.க. நிச்சயமாக ஆதரிக்கும் என்று டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் கூட்டாக தெரிவித்துள்ளனர். #Jayalalithaa #Ramadoss #AnbumaniRamadoss
சென்னை:

பா.ம.க. தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பின்னர் டாக்டர் ராமதாஸ், டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் கூட்டாக நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

மாநிலங்களின் உரிமைகளே மத்திய அரசின் பெருமை. இதனை அடிப்படையாக கொண்டே, நன்கு ஆராய்ந்து தேர்தல் அறிக்கையை வடிவமைத்திருக்கிறோம். இது வழக்கமான சம்பிரதாயத்துக்காக வெளியிடப்படும் தேர்தல் அறிக்கை அல்ல. தமிழக மக்களின் தன்னாட்சி உரிமைக்குரல். தமிழக மக்களின் நலன்களை பாதுகாக்கும் குரலாகவும் எதிரொலிக்கும். நாங்கள் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம். தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளவற்றில் எவற்றையெல்லாம், உடனடியாக நிறைவேற்ற முடியுமோ, அவற்றை நிறைவேற்றவேண்டும் என்று நாங்கள் கோரிக்கை விடுத்திருக்கிறோம்.

புதிய இந்தியா, புதிய தமிழகத்தை நாங்கள் படைப்போம். தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை சந்தித்து உடல்நலம் குறித்து மட்டுமே விசாரித்தோம். தேர்தலை பற்றியோ, அரசியலை பற்றியோ ஒரு வார்த்தை கூட நாங்கள் பேசவில்லை. இரு தரப்பினருக்கும் தொகுதி பங்கீடு எல்லாம் முடிந்துவிட்டது.

பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பான வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும். அந்த வழக்கில் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் நிச்சயம் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்குவதற்கான கோரிக்கையை பா.ம.க. நிச்சயமாக ஆதரிக்கும். எதிர்க்கட்சிகள் செய்யும் வேலையை பா.ம.க. இந்திய அளவில் மிகவும் சிறப்பாக செய்து வருகிறது.



தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை பற்றி ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ விமர்சிக்காததா?, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் விமர்சனம் செய்யாததா? பழைய விஷயங்களை பற்றி பேசினால் யாரும் எந்த கூட்டணியிலும் இடம்பெற முடியாது. ஆனால் எங்களுடைய கோரிக்கையில் இருந்து நாங்கள் எள்ளளவும் பின் வாங்கவில்லை. எங்களுடைய தேர்தல் அறிக்கையை தி.மு.க. காப்பியடிக்கக்கூடாது.

இவ்வாறு அவர்கள் கூறினர். #Jayalalithaa #Ramadoss #AnbumaniRamadoss
Tags:    

Similar News