செய்திகள்

தூத்துக்குடியில் பதுக்கி வைக்கப்பட்ட 2 கடல் ஆமைகள் மீட்பு

Published On 2019-03-14 16:21 GMT   |   Update On 2019-03-14 16:21 GMT
தூத்துக்குடி பாத்திமாநகர் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்ட 2 கடல் ஆமைகள் மீட்கப்பட்டன.
தூத்துக்குடி:

கடல் ஆமை அழிந்து வரும் இனமாக உள்ளது. மன்னார்வளைகுடா பகுதியில் காணப்படும் அரிய வகை உயிரினங்களில் ஒன்றான கடல் ஆமை அதிக அளவில் வேட்டையாடப்படுவதால் எண்ணிக்கை குறைந்து வந்தது. இதனால் இந்த கடல் ஆமையை பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு வருகிறது. மன்னார்வளைகுடா உயிர்க்கோள காப்பக வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கடல் ஆமையின் ரத்தம் மற்றும் இறைச்சி பல நோய்களுக்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது. இதனால் சிலர் தடையை மீறி கடல் ஆமைகளை பிடித்து விற்பனை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் தூத்துக்குடி பாத்திமாநகர் பகுதியில் கடல் ஆமை பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக தூத்துக்குடி தென்பாகம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஜீன்குமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் சிவக்குமார், ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் விரைந்து சென்றனர். அங்கு உள்ள பழைய மாநகராட்சி கழிவறை கட்டிடத்தில் சோதனை செய்தனர். அங்கு 2 ராட்சத ஆமைகள் உயிரோடு இருந்தன. இதில் ஒரு ஆண் ஆமை 85 கிலோ எடையும், ஒரு பெண் ஆமை 65 கிலோ எடையும் இருந்தது. இந்த 2 ஆமைகளையும் போலீசார் மீட்டனர். 

தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பக வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். உடனடியாக வனத்துறையினர் 2 ஆமைகளையும் தூத்துக்குடி தாளமுத்துநகர் மொட்டை கோபுரம் கடற்கரை பகுதிக்கு கொண்டு சென்றனர். அங்கு 2 ஆமைகளையும் பத்திரமாக கடலில் விட்டனர். அந்த ஆமைகள் அங்கிருந்து கடலில் நீந்தி சென்றன.

மேலும் கடல் ஆமைகளை சட்டவிரோதமாக பிடித்து வந்து பதுக்கி வைத்தவர்கள் யார் என்று வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த பகுதியில் ஓரிரு ஆமை வெட்டி அதன் இறைச்சி விற்பனை செய்யப்பட்டு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அது தொடர்பாகவும் விசாரணை நடத்தி வருகின்றனர். 
Tags:    

Similar News