செய்திகள்

உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு - விவசாயிகள் போராட்டம் 7-வது நாளாக நீடிப்பு

Published On 2019-03-09 13:26 GMT   |   Update On 2019-03-09 13:26 GMT
குமாரபாளையம் அருகே உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் 7வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குமாரபாளையம்:

மத்திய அரசின் சார்பில் பவர்கிரிட் நிறுவனம் விவசாய நிலங்களில் உயர் மின்கோபுரங்கள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அதற்கு பதிலாக சாலை ஓரங்களில் புதை வட கம்பிகளை பதிக்கும் திட்டத்தை செயல்படுத்திட வலியுறுத்தியும், ஏற்கனவே உயர்மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிலத்தின் மதிப்பிற்கேற்ப முறையான இழப்பீடு உயர் மின் கோபுரங்கள் அமைந்துள்ள பகுதிகளுக்கு வருட வாடகையும் வழங்கிட வலியுறுத்தியும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

குமாரபாளையம் அருகே உள்ள படைவீடு கவுண்டனூர் பகுதியில் விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத்தின் சார்பில் உயர்மின் கோபுரங்களுக்கு எதிரான தொடர் போராட்டம் நேற்று 6-வது நாளாக நடைபெற்றது.

கூட்டியக்க ஒருங்கிணைப்பாளர் பெருமாள் தலைமையில் தொடங்கி உள்ள இப்போராட்டத்தில் ஈசன், முனுசாமி, குணசேகரன், தங்கவேல், எம்.சண்முகம், சுரேஷ், செல்வராஜ், ஏ.சண்முகம், சின்னதுரை ஆசிய 10 பேர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

போராட்டத்திற்கு ஆதரவாக பெண்கள் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைகளில் கருப்புக்கொடி ஏந்தியபடி மத்திய மாநில அரசுகளை கண்டித்து ஆர்பாட்டம் செய்தனர். தொடர்ந்து அவரவர் விவசாய நிலங்கள், கிணறுகள், வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று 7-வது நாளாக இந்த போராட்டம் நீடித்து வருகிறது.

உயர்மின் கோபுர மின் கம்பிகள் கீழே, எந்தவித மின் இணைப்பும் இன்றி மின் காந்த அலைகளால் டியூப் லைட் எரிந்ததை விவசாயிகள் நிரூபித்தனர்.

இது குறித்து விவசாய சங்க கூட்டியக்க ஒருங்கிணைப்பாளர் ஈசன் கூறியதாவது:-

உயர்மின் கோபுரம் வழியாக மின் கம்பிகள் செல்லும் இடங்களில் அருகில் இருக்கும் மனிதர்கள், கால்நடைகள் உள்ளிட்ட உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்படுகிறது. புற்று நோய் உள்ளிட்ட 16 வகை நோய்கள் உண்டாகின்றன என உலக சுகாதார அமைப்புகள் கூறி உள்ளன.

இதை தமிழக அரசு மறுத்து வருகிறது. இதை பொய்ப்பிக்கும் வகையில் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இருந்து தர்மபுரி மாவட்டம் பாலவாடி வரை உயர்மின் கோபுரம் வழியாக 400 கே.வி. மின்சார உயர் மின் அழுத்த கம்பிகள் செல்லும் இடத்தில் கம்பிகள் கீழே டியூப் லைட்டுகள் எவ்வித மின் இணைப்பும் இன்றி எரிவதையும், உடலில் டெஸ்டர் வைத்தால் அதுவும் எரிவதை நிரூபித்து காட்டினோம்.

இவ்வாறு அவர் கூறினார். #tamilnews
Tags:    

Similar News