செய்திகள்
பள்ளி கட்டிடத்தில் தீ பிடித்து எரிவதை படத்தில் காணலாம்.

புவனகிரி அரசு பள்ளியில் திடீர் தீ விபத்து - தேர்வு தாள்கள் தப்பின

Published On 2019-03-09 09:38 GMT   |   Update On 2019-03-09 09:38 GMT
புவனகிரி அரசு பள்ளியில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புவனகிரி:

கடலூர் மாவட்டம் புவனகிரியில் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் உடைந்த மேஜை நாற்காலிகள் மற்றும் பயன்படாத பொருட்களை பள்ளி வளாகத்தில் உள்ள ஒரு அறையில் பூட்டி வைத்திருந்தனர்.

தற்போது இந்த பள்ளியில் பிளஸ்-1, பிளஸ்-2 பொது தேர்வு நடந்து வருகிறது. புவனகிரியை சுற்றியுள்ள தனியார் பள்ளி மாணவர்களும் இந்த பள்ளியில் தான் தேர்வு எழுதுகின்றனர். இந்த நிலையில் நேற்று இரவு அந்த அறையில் திடீரென தீ பிடித்து எரிந்தது. இதை பார்த்த அந்த பகுதி பொதுமக்கள் உடனடியாக சிதம்பரம் தீயணைப்பு நிலையத்துக்கும், பள்ளி தலைமை ஆசிரியருக்கும் தகவல் தெரிவித்தனர்.

தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீ பற்றி எரிந்த அறையில் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் அந்த அறையில் இருந்த பொருட்கள் அனைத்தும் தீயில் கருகி சேதமடைந்தது. இதுகுறித்து புவனகிரி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் பள்ளி அறைக்கு மர்ம மனிதர்கள் யாரும் தீ வைத்தனரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தீ பற்றி எரிந்த பள்ளி அறையின் அருகில்தான் பள்ளியின் அலுவலக அறை உள்ளது. அதில் தற்போது பிளஸ்-1, பிளஸ்-2 தேர்வு எழுதும் மாணவர்களின் தேர்வு தாள்கள் வைக்கப்பட்டிருந்தது. இந்த அறைக்கு தீ பரவுதற்கு முன் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்ததால் தேர்வு தாள்கள் தப்பின.



Tags:    

Similar News