செய்திகள்

வண்டலூர் புதிய மேம்பாலப்பணி அடுத்த மாதம் முடிவடையும் - போக்குவரத்து நெரிசல் குறையும்

Published On 2019-03-02 15:36 IST   |   Update On 2019-03-02 15:36:00 IST
வண்டலூர் பாலத்தின் கட்டுமான பணிகள் அடுத்த மாதம் (ஏப்ரல்) முடிவடையும் என்று கட்டுமான நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.

சென்னை:

தென்மாவட்டங்களில் இருந்து பெருங்களத்தூர் வழியாக சென்னை மாநகருக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன.

இதனால் பெருங்களத்தூரில் இருந்து திருச்சி செல்லும் சாலை எப்போதும் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கிறது. பெருங்களத்தூர், வண்டலூர், கூடுவாஞ்சேரி ஆகிய இடங்களில் வாகனங்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது.

இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் வண்டலூர் சந்திப்பில் ரூ.55 கோடி செலவில் உயர்நிலை மேம்பாலம் கட்டப்படுகிறது. வண்டலூர்-கேளம்பாக்கம் சந்திப்பில் ஜி.எஸ்.டி. சாலை யில் இந்த பாலம் அமைக்கப்படுகிறது.

6 வழிப்பாதையுடன் கூடிய உயர்நிலை மேம்பாலம் அமைக்கும் பணி கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டது. 711 மீட்டர் நீளம் கொண்ட இந்த பாலத்தில் சாலையின் நடுவே 9 தூண்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த பால கட்டுமான பணி கடந்த ஆண்டே முடிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் கட்டுமான தொழிலாளர்கள் கிடைப்பதில் பிரச்சினை, மணல் கிடைக்காமை, சிமெண்ட் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் பாலம் கட்டுமான பணியில் தாமதம் ஏற்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் வண்ட லூர் பாலத்தின் கட்டுமான பணிகள் அடுத்த மாதம் (ஏப்ரல்) முடிவடையும் என்று கட்டுமான நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர். தற்போது பாலத்தின் சுற்றுச் சுவர்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த மேம்பால பகுதியில் புதிய டிராபிக் சிக்னலும் அமைக்கப்படுகிறது.

சென்னையில் இருந்து கேளம்பாக்கம் செல்லும் வாகனங்கள் பாலத்தின் வலதுபுறம் திரும்பி கீழே இறங்கி செல்ல வேண்டும்.

தற்போது மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் போக்குவரத்து நெரிசல் காரணமாக 10 நிமிடத்துக்கும் மேல் இந்த பகுதியில் காத்திற்க வேண்டி உள்ளது. இந்த பாலம் திறக்கப்பட்டால் போக்குவரத்து நெரிசல் குறைவதுடன் அனைத்து வாகனங்களும் விரைவில் செல்ல முடியும்.

Similar News