செய்திகள்

விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டம் - அரியலூரில் தொடங்கியது

Published On 2019-02-25 17:46 GMT   |   Update On 2019-02-25 17:46 GMT
அரியலூர் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்குவதற்கான பிரதம மந்திரி யின் கிசான் சம்மான் நிதி திட்டம் தொடங்கப்பட்டது.
அரியலூர்:

அரியலூர் மாவட்டத்தில் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டம் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டு கடந்த டிசம்பர் மாதம் 1-ந் தேதி செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டதின் கீழ் சிறு மற்றும் குறு விவசாயிகளின் வருவாய் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய ஒரு விவசாய குடும்பத்திற்கு ஆண்டு தோறும் ரூ.6 ஆயிரம் மூன்று சம தவணைகளில் ஒரு தவணைக்கு ரூ.2 ஆயிரம் வீதம் வழங்கப்படும்.

இந்த திட்டத்தில் அரியலூர் மாவட்டத்தில் 2 ஹெக்டேர் வரை விவசாய நிலம் உள்ள சிறு மற்றும் குறு விவசாயிகளிடமிருந்து விண்ணப்பங்கள் 90 ஆயிரத்து 500 விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்டது. இதேபோல் பெரம்பலூர் மாவட்டத்தில் 2 ஹெக்டேர் வரை விவசாய நிலம் உள்ள சிறு மற்றும் குறு விவசாயிகளிடமிருந்து இதுவரை 63 ஆயிரத்து 251 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, தகவல் பதிவேற்ற பணிகள் முடிவுறும் நிலையில் உள்ளது.

இந்த நிலையில் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி உதவி திட்டத்தினை அரியலூர் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரனும், கலெக்டர் விஜயலட்சுமியும் தொடங்கி வைத்து விவசாயிகளுக்கு நிதி உதவி திட்டத்திற்கான ஆணைகளை வழங்கினர். நிகழ்ச்சிக்கு ராமஜெயலிங்கம் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். மத்திய அரசின் பிரதம மந்திரி கிசான் சம்மான் திட்டத்தின் கீழ் அரியலூர் மாவட்டத்தில் முதல் தவணையாக 45 ஆயிரத்து 518 விவசாயிகளுக்கு, அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்படவுள்ளது. மேலும், மீதமுள்ள விவசாயிகளுக்கு தொடர்ந்து வழங்கப்படும் என கலெக்டர் விஜயலட்சுமி தெரிவித்தார். இதில் மாவட்ட வருவாய் அதிகாரி பொற்கொடி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சுந்தர்ராஜ், வேளாண்மை இணை இயக்குனர் (பொறுப்பு) பழனிசாமி, துணை இயக்குனர் (தோட்டக்கலைத்துறை) அன்புராஜன், செயற்பொறியாளர் (வேளாண் பொறியியல் துறை) நாகநாதன், கோட்டாட்சியர்கள் சத்தியநாராயணன் (அரியலூர்), ஜோதி (உடையார்பாளையம்), வருவாய்த்துறை, வேளாண்மைத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை அலுவலர்கள், விவசாயிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதேபோல் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி உதவி திட்டத்தினை பெரம்பலூர் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ. முன்னிலையில் கலெக்டர் சாந்தா தொடங்கி வைத்து விவசாயிகளுக்கு நிதி உதவி திட்டத்திற்கான ஆணைகளை வழங்கினார். இதில் மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி, வேளாண்மைத்துறை இணை இயக்குனர் இளவரசன், மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமையின் துணை இயக்குனர் முருகன், வேளாண்மை துணை இயக்குனர் (மத்திய திட்டம்) ராஜசேகரன், தோட்டக்கலை உதவி இயக்குனர் இந்திரா மற்றும் வேளாண் பொறியியல் துறையின் உதவி பொறியாளர் அறிவழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
Tags:    

Similar News