செய்திகள்

வலங்கைமான் அருகே பஸ்சில் இருந்து தவறி விழுந்த மாணவர் பலி

Published On 2019-02-25 09:07 GMT   |   Update On 2019-02-25 09:07 GMT
வலங்கைமான் அருகே பஸ்சில் இருந்து தவறி விழுந்த மாணவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வலங்கைமான்:

திருவாரூர் மாவட்டம் சந்திரசேகரபுரம் பூண்டி குடியான தெருவை சேர்ந்த பாஸ்கர் மகன் ராஜேஷ் (வயது 18). இவர் வலங்கைமானில் செயல்படும் அரசு தொழிற்பயிற்சி மையத்தில் 3-வது ஆண்டு படித்து வந்தார்.

இவர் தினமும் அரசு பஸ்சில் பூண்டியில் இருந்து வலங்கைமான் சென்று வருவார்.

கடந்த 21-ந் தேதி ராஜேஷ் வலங்கைமான் சென்று விட்டு மாலையில் அரசு பஸ்சில் சந்திரசேகரபுரம் புறப்பட்டார். அந்த பஸ்சில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்ததால் பின்பக்க படிக்கட்டில் நின்றுகொண்டு பயணம் செய்தார்.

பஸ் சந்திரசேகரபுரம் பகுதியில் சென்ற போது, படியில் தொங்கியபடி சென்ற ராஜேஷ் தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். அவரை மீட்டு தஞசையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். நேற்று சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

இந்த விபத்து குறித்து வலங்கைமான் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆண்டிதோப்பை சேர்ந்த பஸ் டிரைவர் சுப்பிரமணியனை கைது செய்தனர்.

மாணவர் பலியான சம்பவம் சந்திரதேகரபுரம் மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. இந்த விபத்துக்கு போதிய வசதி இல்லாமல் மாணவர்கள் கூட்டநெரிசலில் பயணம் செய்வது தான் முக்கிய காரணம். எனவே காலை, மாலை நேரங்களில் கூடுதல் பஸ்களை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News