செய்திகள்

பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் தூர்வாரும் பணிகள் - எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்

Published On 2019-02-20 08:01 GMT   |   Update On 2019-02-20 08:01 GMT
செம்பரம்பாக்கம் ஏரி, புழல் ஏரி, பூண்டி ஏரிகளில் 124 கோடியே 8 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான தூர்வாரும் பணிகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். #EdappadiPalaniswami
சென்னை:

சென்னை தலைமை செயலகத்தில் பல்வேறு திட்டப்பணிகளுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று அடிக்கல் நாட்டி பல்வேறு பணிகளை தொடங்கி வைத்தார்.

சென்னை-தண்டையார்பேட்டை டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் அருகில் நேரு நகர் மற்றும் எழில் நகர் பகுதிகளை இணைக்க வடக்கு பக்கிங்காம் கால்வாயின் குறுக்கே 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இருவழிப்பாலம்,

பழனி, மாட்டு மந்தை அருகில் பாலாற்றின் குறுக்கே 98 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தரைப்பாலம், செய்யூர் வட்டம், பக்கிங்காம் கால்வாயின் குறுக்கே 9 கோடியே 97 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மறு கட்டுமானம் செய்யப்பட்ட ஒரு வழிப்பாலம் என மொத்தம் 240 கோடியே 89 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான நீர்வள ஆதாரத்துறையின் முடிவுற்ற திட்டப் பணிகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

அடையாறு ஆறு மற்றும் செம்பரம்பாக்கம் ஏரி, புழல் ஏரி, பூண்டி ஏரி ஆகிய ஏரிகளில் 124 கோடியே 8 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான தூர்வாரும் பணிகள் என மொத்தம் 532 கோடியே 98 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான நீர்வள ஆதாரத்துறையின் புதிய திட்டப் பணிகளுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

சென்னை, சேத்துப்பட்டு பொழுதுபோக்கு மீன்பிடிப்பு மற்றும் பசுமை பூங்கா வளாகத்தில் 6 கோடியே 93 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 20 இருக்கைகள் கொண்ட குளிர்சாதன வசதிகளுடன் கூடிய மெய்நிகர் காட்சியக அரங்கம், தொடுதிரை கணினி உள்ளிட்ட வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள வண்ண மீன் காட்சியகத்துடன் கூடிய மெய்நிகர் காட்சியகம்,

மாதவரம் வளாகத்தில் 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வண்ண மீன் வானவில் விற்பனை வளாகம் என மொத்தம் 21 கோடியே 27 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறையின் பல்வேறு திட்டங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

உயர் கல்வித்துறை சார்பில் உசிலம்பட்டியில் உள்ள அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் 10 கோடியே 69 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைகள், கருத்தரங்கக்கூடம், விடுதி, பணிமனை மற்றும் இதர கட்டிடங்களை காணொலிக் காட்சி மூலமாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

மேலும் தேனி, சேலம், தருமபுரி, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, விழுப்புரம், திண்டுக்கல், வேலூர், தூத்துக்குடி, திருவாரூர், தஞ்சாவூர், சிவகங்கை மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் 67 கோடியே 25 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களையும் திறந்து வைத்தார்.

2018-ம் ஆண்டுக்கான தமிழ்த்தாய் விருது, கபிலர் விருது, உ.வே.சா. விருது, கம்பர் விருது, சொல்லின் செல்வர் விருது, ஜி.யு.போப் விருது, உமறுப்புலவர் விருது, இளங்கோவடிகள் விருது, அம்மா இலக்கிய விருது, சிங்காரவேலர் விருது, சிறந்த மொழி பெயர்ப்பாளர் விருதுகளையும் 2017-ம் ஆண்டுக்கான முதல்-அமைச்சர் கணினித் தமிழ் விருது மற்றும் 2018-ம் ஆண்டுக்கான உலகத் தமிழ்ச் சங்க விருதுகள் மற்றும் தமிழ்ச்செம்மல் விருதுகள் என மொத்தம் 56 விருதுகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை செயலகத்தில் விருதாளர்களுக்கு வழங்கி சிறப்பித்தார். #EdappadiPalaniswami

Tags:    

Similar News