செய்திகள்

மதுரையில் ரூ. 10 லட்சம் மதிப்புள்ள நகைகள் மாயம் - வடமாநில வாலிபருக்கு வலைவீச்சு

Published On 2019-02-19 09:53 GMT   |   Update On 2019-02-19 09:53 GMT
நகைப்பட்டறையில் இருந்த 50 பவுன் நகை மாயமானது தொடர்பாக பட்டறையில் வேலை பார்த்த வட மாநில வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரை:

மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்தவர் சபிக்குல்(வயது 35). இவர் கடந்த சில ஆண்டுகளாக மதுரை தெற்கு மாசி வீதியில் நகைப்பட்டறை நடத்தி வருகிறார். இங்கு பிரபல நகைகடைகளில் இருந்து வரும் நகைகளுக்கு பாலிஷ் போடுவது, டிசைன் செய்வது உள்ளிட்டவைகளை சபிக் குல் செய்து வந்தார். சில மாதங்களுக்கு முன்பு மேற்கு வங்கத்தை சேர்ந்த முகமது அஹத் ஹாசி (19) என்பவரை உதவியளராக சபிக்குல் பணியில் சேர்ந்து உள்ளார்.

நேற்று மதியம் சபிக்குல் நகைகளுக்கு பாலிஷ் போடும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது முகமது அஹத் ஹாசி டீ வாங்கி வருவதாக கூறி வெளியே சென்றார். பின்னர் நீண்ட நேரமாகியும் அவர் பட்டறைக்கு திரும்பவில்லை. செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றும் பலன் இல்லை.

இதனால் சந்தேகமடைந்த சபிக்குல் பட்டறையில் இருந்து நகைகள் இருப்பை ஆய்வு செய்தார். அப்போது 50 பவுன் நகை மாயமானது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த சபிக்குல் இதுகுறித்து தெற்கு வாசல் போலீசில் புகார் கொடுத்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார் பட்டறையில் ஆய்வு நடத்தினர்.

மாயமான முகமது அஹத்ஹாசி நகைகளை திருடி சென்றிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. அதின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வரு கிறார்கள். மாயமான நகைகளின் மதிப்பு ரூ. 10 லட்சம் ஆகும். #tamilnews
Tags:    

Similar News