செய்திகள்

கும்பகோணம் அருகே ரூ.30 லட்சம் கேட்டு கல்லூரி மாணவி கடத்தல் - போலீசார் விசாரணை

Published On 2019-02-17 10:19 GMT   |   Update On 2019-02-17 10:19 GMT
கும்பகோணம் அருகே ரூ.30 லட்சம் கேட்டு கல்லூரி மாணவி கடத்தி செல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கும்பகோணம்:

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள பந்தநல்லூர் வேலன்தொட்டி பகுதியை சேர்ந்தவர் பாண்டியன். இவரது மகள் சுபபிரியா (வயது 21). இவர் கும்பகோணம் அரசு கலை கல்லூரியில் படித்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று வழக்கம் போல் சுபபிரியா கல்லூரிக்கு சென்றார். அதன்பின்னர் மாலையில் அவர் வீடு திரும்பவில்லை.

இதனால் சுபபிரியாவின் தாய் சித்ரா அதிர்ச்சி அடைந்து மகளை பல இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் காணவில்லை.

கும்பகோணத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கும் சென்று மகளை தேடி பார்த்தனர். அங்கும் அவர் இல்லை.

இதற்கிடையே சுபபிரியாவின் செல்போன் எண்ணில் இருந்து தாய் சித்ராவின் செல்போனுக்கு நேற்று மாலை ஒரு குறுஞ்செய்தி வந்தது.

அதில், உங்களது மகள் சுபபிரியாவை கடத்தி வைத்துள்ளோம். எங்களுக்கு ரூ.30 லட்சம் கொடுத்து மகளை மீட்டு கொள்ளுங்கள். பணம் கொடுக்கவில்லை என்றால் மாணவியின் உடலை வீட்டுக்கு அனுப்புவோம்’ என்று குறிப்பிட்டு இருந்தது.

இதை படித்து பார்த்து அதிர்ச்சி அடைந்த சித்ரா, உடனடியாக பந்தநல்லூர் போலீசில் புகார் செய்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மாணவியை கடத்திய கும்பல், பெற்றோருக்கு செல்போனில் எஸ்.எம்.எஸ். மட்டுமே அனுப்பி உள்ளனர். போனில் எதுவும் பேசவில்லை என்பதால் போலீசாருக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாணவி சுபபிரியா காதல் விவகாரத்தில் கடத்தப்பட்டு உள்ளாரா? பணத்தை பறிக்கும் நோக்கில் மர்ம கும்பல் அவரை கடத்தி சென்றுள்ளதா? அல்லது மாணவியே கடத்தல் நாடகம் நடத்துகிறாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

ரூ.30 லட்சம் கேட்டு கல்லூரி மாணவி கடத்தி செல்லப்பட்ட சம்பவம் கும்பகோணம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Tags:    

Similar News