செய்திகள்

உச்சத்தில் தங்கம் விலை- சவரனுக்கு ரூ.25,520 உயர்வு

Published On 2019-02-16 11:23 IST   |   Update On 2019-02-16 12:18:00 IST
தங்கத்தின் விலை உயர்வு காரணமாக திருமணம் உள்பட பல்வேறு சுபநிகழ்ச்சிகளுக்கு நகை வாங்கும் மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். #Gold #GoldPrice
சென்னை:

சர்வதேச பொருளாதார சூழ்நிலை, உலகச்சந்தையில் தங்கத்தின் மதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.

தங்கத்தின் விலை கடந்த டிசம்பர் மாதம் முதல் படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியது. டிசம்பர் 1-ந் தேதி தங்கத்தின் விலை 1 சவரன் ரூ.23, 240 ஆக இருந்தது. டிசம்பர் 8-ந் தேதி 1 சவரன் தங்கம் ரூ.24,080 ஆக அதிகரித்தது.

அதன்பிறகு தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்தபடியே காணப்பட்டது. ஜனவரி 28-ந்தேதி வரலாறு காணாத வகையில் தங்கத்தின் விலை 1 சவரன் ரூ.25 ஆயிரத்தை தாண்டியது. அன்று சவரன் விலை ரூ.25,160-க்கு விற்கப்பட்டது. பிப்ரவரி 2-ந் தேதி அதிகபட்சமாக ரூ.25,552-க்கு விற்பனையானது.

அதன்பிறகு சில நாட்கள் தங்கத்தின் விலை குறைந்து வந்தது. கடந்த 14-ந் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.25,160-க்கு விற்கப்பட்டது. நேற்று மீண்டும் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.224 அதிகரித்தது.

நேற்று ஒரு பவுன் தங்கம் மீண்டும் உச்சத்தை தொட்டு பவுன் விலை ரூ. 25,384க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று சவரனுக்கு மேலும் ரூ.136 அதிகரித்து ரூ25,520-க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் ரூ.3190 ஆகும்.



தங்கத்தின் விலை உயர்வு காரணமாக திருமணம் உள்பட பல்வேறு சுபநிகழ்ச்சிகளுக்கு நகை வாங்கும் மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அமெரிக்காவில் உற்பத்தி குறியீடு சரிவு, பொருளாதாரத்தில் பின்னடைவு, பெரும் அளவில் வேலை நிறுத்தம், அமெரிக்க அரசின் கொள்கையில் மாற்றம் போன்ற காரணங்களால் அங்குள்ள பெரிய முதலீட்டாளர்கள் மற்ற வர்த்தகம் சார்ந்த பங்குச் சந்தையில் முதலீடு செய்யாமல் தங்கத்தில் பெரிய அளவில் முதலீடு செய்கின்றனர்.

மேலும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி காரணமாகவும் சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை உயர்கிறது. இதன் தாக்கம் இந்திய சந்தையில் எதிரொலிக்கிறது.

இதனால் தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது. இந்த மாதம் முழுவதும் தங்கத்தின் விலையில் பெரிய அளவில் ஏற்றமும் இறக்கமும் இருக்கும் என்று கூறப்படுகிறது. #Gold #GoldPrice
Tags:    

Similar News