செய்திகள்

கிரண்பேடியை கண்டித்து காரைக்காலில் திமுக, காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல்

Published On 2019-02-14 16:46 IST   |   Update On 2019-02-14 16:46:00 IST
காரைக்காலில் கவர்னர் கிரண்பேடியை கண்டித்து திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். #DMK #Congress #KiranBedi
காரைக்கால்:

புதுவை மாநிலத்தில் கவர்னர் கிரண்பேடிக்கும், முதலமைச்சர் நாராயணசாமிக்கும் இடையே கடும் மோதல் இருந்து வருகிறது.

இந்த நிலையில் கவர்னர் கிரண்பேடி கட்டாய ஹெல்மெட் திட்டத்தை அமுல்படுத்துவதாக தன்னிச்சையாக அறிவித்தார். இதற்கு முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

நேற்று இரவு கவர்னர் கிரண்பேடிக்கு எதிராக முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் கவர்னர் மாளிகை முன்பு திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று 2-வதுநாளாகவும் போராட்டம் நடைபெற்றது.

கவர்னர் கிரண்பேடியை கண்டித்து காரைக்கால் கலெக்டர் அலுவலகம் அருகே மாதாகோவில் வீதியில் இன்று காலை 11 மணி அளவில் தி.மு.க.- காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் திரண்டனர். பின்னர் அவர்கள் முன்னாள் அமைச்சர் நாஜிம் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் காங்கிரஸ், தி.மு.க., கம்யூனிஸ்டு உள்பட பல்வேறு கட்சியினர் கலந்து கொண்டனர். அவர்கள் தலையில் ஹெல்மெட் அணிவதுபோல் மண்சட்டி அணிந்து கண்டன கோ‌ஷம் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தையடுத்து அவர்கள் மறியல் செய்ய முயன்றனர். அதற்கு போலீசார் அனுமதிக்காததால் அவர்கள் அதே இடத்தில் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

அப்போது முன்னாள் அமைச்சர் நாஜிம் பேசியதாவது:-

கவர்னர் கிரண்பேடி மக்களையும், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களை ஆட்டிபடைத்து வருகிறார். ஒரு திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என்றால் ஆளுங்கட்சியுடன் ஆலோசித்து முடிவு எடுக்க வேண்டும். தன்னிச்சையாக முடிவு எடுக்ககூடாது.

மேலும் நடுரோட்டில் போலீஸ்காரர்போல் இறங்கி மக்களை அச்சுறுத்தி வருகிறார். மத்திய அரசு கொடுத்த வேலையை கவர்னர் கிரண்பேடி செய்து வருகிறார். இது கண்டிக்கத்தக்கது. இதேநிலை நீடித்தால் கவர்னருக்கு எதிராக மக்கள் வெகுண்டு எழும் நிலை உறுவாகும்.

இவ்வாறு அவர் கூறினார். #DMK #Congress #KiranBedi
Tags:    

Similar News