செய்திகள்

அதிமுகவுடன் கூட்டு சேரும் கட்சிகள் டெபாசிட் இழக்கும் - தினகரன்

Published On 2019-02-10 04:49 GMT   |   Update On 2019-02-10 04:49 GMT
அதிமுகவுடன் கூட்டு சேரும் கட்சிகள் டெபாசிட் இழக்கும் என்று அம்ம மக்கள் முன்னேற்ற கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். #ADMK #TTVDhinakaran

விழுப்புரம்:

அம்ம மக்கள் முன்னேற்ற கழக துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் மக்கள் சந்திப்பு பயணம் நிகழ்ச்சியை விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி, தியாக துருகத்தில் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-‘

18 எம்.எல்.ஏ.க்களின் தீர்ப்பு சாதகமாக வரும் என்று நினைத்தோம். ஆனால் தீர்ப்பு நமக்கு சாதகமாக வரவில்லை. எனினும் மக்கள் தீர்ப்பு வழங்கும் வாய்ப்பாக வரும் பாராளுமன்ற தேர்தலும், அதனோடு சேர்ந்துவரும் 20 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலும் வர இருக்கிறது.

இதில் 8 தொகுதிகளில் பழனிசாமி அணி வெற்றி பெற முடியவில்லை எனில் இந்த ஆட்சி தானாகவே முடிவுக்கு வந்துவிடும் நிலை ஏற்படும். இந்த ஆட்சியாளர்களால் ஒரு தொகுதியில் கூட வெற்றிபெற முடியாது. காரணம் அவ்வளவு எதிர்ப்பாக இந்த ஆட்சியின் மீது வெறுப்பாக உள்ளனர்.

ஒரு தொகுதியில் கூட வெற்றிபெற முடியாது என்று தெரிந்திருக்கின்ற காரணத்தினால் தான் இங்கே ஆட்சியில் இருப்பவர்கள் பல கட்சிகளை கூட்டணியில் சேர்த்து கொண்டு வந்தாலாவது தலை தப்பிக்குமா? என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.ஆனால் ஆளும் கட்சியொடு சேர்ந்து வரப்போகின்ற அனைவருமே, ஆளும் கட்சியை போன்று பூஜ்ஜியமாகப் போகிறார்கள்.

எத்தனை கட்சிகளை கூட்டணிக்கு கொண்டு வந்தாலும் இவர்களால் வெற்றிபெற முடியாது. டெபாசிட் பெறுவதே கடினம்.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஊதிய உயர்வு கேட்டால் நிதி இல்லை என்பவர்கள் சட்ட மன்ற உறுப்பினர்கள் கேட்காமலேயே அவர்களுக்கு 2 மடங்கு உயர்த்தி ரூ.1 லட்சம் சம்பளம் வழங்குகிறார்கள்.

மக்கள் இந்த ஆட்சியை விரும்பாததால் இருக்கும் வரை இந்த ஆட்சி தொடர வேண்டும் என்ற காரணத்தினால் சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை இருந்தால் போதும் என்று சட்டமன்ற உறுப்பினர்களின் நலனில் அக்கறை காட்டுவது போல 8 கோடி தமிழக மக்களின் நலனில் இவர்கள் அக்கறை காட்டவில்லை.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையை கொண்டு வந்து ஏற்கனவே தொழில் எல்லாம் பாதிக்கப்பட்ட நிலையில் பணமதிப்பு இழப்பால் வியாபாரங்கள் எல்லாம் பாதிக்கப்பட்டிருக்கிறது. கருப்பு பணத்தை ஒழிக்கிறேன் என்று நாட்டின் வியாபாரத் தொழிலையே ஒழித்துவிட்டார்கள். மேலும் தமிழக விவசாயிகளை குறிவைத்து மத்திய அரசு தாக்குகிறது.

இவ்வாறு அவர் பேசினார். #ADMK #TTVDhinakaran

Tags:    

Similar News