செய்திகள்

கஜா புயலுக்கு நிவாரணம் கேட்டு விவசாயிகள் கலெக்டர் ஆபீசில் முற்றுகை

Published On 2019-01-31 14:12 GMT   |   Update On 2019-01-31 14:12 GMT
திண்டுக்கல் கலெக்டர் ஆபீசில் விவசாயிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல்:

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் வினய் தலைமை தாங்கினார். வேளாண்மை அதிகாரிகள் வேளாங்கண்ணி, மனோகர் மற்றும் பலர் பங்கேற்றனர். கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக வேடசந்தூர் அருகே உள்ள ஆர். கோம்பை, வடுகம்பாடி விவசாயிகள் கஜா புயலுக்கு நிவாரணம் வழங்ககோரி கோ‌ஷம் எழுப்பினர்.

அப்போது அவர்கள் கூறுகையில், எங்களது பகுதியில் 1,500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் கஜா புயலால் பாதிக்கப்பட்டது. ஆனால் 600 பேருக்கு மட்டுமே நிவாரணம் கிடைத்து உள்ளது.

மற்றவர்களுக்கு வழங்கப்படவில்லை. எனவே பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என்றனர். இதனையடுத்து தங்களது கோரிக்கை மனுக்களை கலெக்டரிடம் வழங்கினர்.

கொடைக்கானலில் புயலால் சிசு வாழை பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் அதற்கு மானியம் வழங்ககோரியும் மனு அளிக்கப்பட்டது. திண்டுக்கல் சிறுமலையை சேர்ந்த காய்கறி விவசாயிகள் கலெக்டரிடம் வழங்கிய மனுவில் தங்களது பகுதியில் விளையும் சவ்சவ், வாழை, எலுமிச்சை, அவரை உள்ளிட்ட காய்கறிகளை திண்டுக்கல் காந்தி மார்க்கெட்டுக்கு கொண்டு வருகிறோம். கடந்த சிலநாட்களாக அங்கு உள்ள காண்டிராக்டர்கள் தலா ஒரு மூட்டைக்கு பணம் கேட்கிறார்கள்.

பணம் தரவில்லை என்றால் உள்ளே கொண்டு வர அனுமதிக்க மறுக்கிறார்கள். எனவே முன்பு போலவே இலவசமாக காய்கறிகள் கொண்டு வர அனுமதிக்க வேண்டும் என்றனர்.

Tags:    

Similar News