செய்திகள்

ஜெயலலிதா மரணத்துக்கு காரணமானவர்கள் ஜெயிலுக்கு அனுப்பப்படுவார்கள்: முக ஸ்டாலின்

Published On 2019-01-31 02:01 GMT   |   Update On 2019-01-31 02:01 GMT
தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும், முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணத்துக்கு காரணமானவர்கள் ஜெயிலுக்கு அனுப்பப்படுவார்கள் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். #DMK #MKStalin #JayalalithaDeath
ஈரோடு :

தி.மு.க. முன்னாள் தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான கருணாநிதி சிலை ஈரோடு முனிசிபல் காலனி திரு.வி.க. வீதியில் அமைக்கப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நேற்று மாலை நடந்தது. விழாவுக்கு ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சு.முத்துசாமி தலைமை தாங்கினார். முன்னாள் மத்திய மந்திரிகள் சுப்புலட்சுமி ஜெகதீசன், ஆ.ராசா ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி வெண்கல உருவச்சிலையை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

தமிழக முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் இருந்தபோது என்ன தகவல் சொன்னார்கள். ரூ.1 கோடிக்கு இட்லி சாப்பிட்டார் என்றார்கள். ஜூஸ் குடித்தார் என்றார்கள். ஆனால் என்ன நடந்தது?. அந்த அம்மையாரால் அடையாளம் காட்டப்பட்டு, இன்றும் அவரால் பதவியை பெற்று இருக்கும் எடப்பாடியும், பதவி போனதும் ஆவியுடன் பேசுகிறேன், உண்மையை கொண்டு வர விசாரணை கமி‌ஷன் அமைக்க வேண்டும் என்று கூறி துணை முதல்-அமைச்சர் பதவி கிடைத்ததும் அமைதியாக இருக்கும் ஓ.பன்னீர்செல்வமும் இப்போது ஏன் பேசவில்லை. மறைந்த ஜெயலலிதாவுக்கு ஒரு இரங்கல் கூட்டமோ, புகழ் அஞ்சலி கூட்டமோ நடத்தி இருப்பார்களா?. ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருக்கிறது என்று கூறுகிறார்கள். அதையும் அவர்கள்தான் கூறினார்கள்.



தமிழக அமைச்சரவையில் சட்டத்துறை அமைச்சராக இருக்கும் சி.வி.சண்முகம் இதுபற்றி சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்கிறார். ஜெயலலிதாவுக்கும், கருணாநிதிக்கும் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். தி.மு.க.வுக்கும் அ.தி.மு.க.வுக்கும் கொள்கை வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் இறந்தது முதல்-அமைச்சர். அவரது மரணம் மர்மமாக இருக்கிறது. தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் முதல் வேலையாக ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஆணையம் அமைக்கப்படும். ஆணையம் அமைத்து உண்மையை வெளிக்கொண்டு வருவது மட்டுமல்ல, ஜெயலலிதாவின் மரணத்துக்கு காரணமானவர்கள் ஜெயிலுக்கு அனுப்பப்படுவார்கள். இது உறுதி. சத்தியம்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது 5 கொலை வழக்குகள் உள்ளன. கோடநாடு காவலாளி கொலை. அந்த கொலையை மறைக்க 4 கொலைகள் என 5 கொலைகள் நடந்து உள்ளன. இதுவரை ஊழல் வழக்குகள் முதல்-அமைச்சர்கள் மீது கூறப்பட்டு உள்ளன. அதற்கு ஜெயலலிதாவே முன்உதாரணம். பல மாநில முதல்-அமைச்சர்கள், அமைச்சர்களும் ஜெயிலுக்கு சென்று இருக்கிறார்கள். ஆனால் கொலை புகார் ஒரு முதல்-அமைச்சர் மீது கூறப்படுகிறது. அவர் தமிழக முதல்-அமைச்சர். அவருக்கு அதுபற்றி அவமானம் இருக்கிறதோ இல்லையோ, தமிழ்நாட்டுக்கு மிக அவமானமாகும்.

எனவே இந்த தமிழக அரசுக்கும், இதற்கு முட்டுக்கொடுக்கும் பாசிச பா.ஜனதா அரசுக்கும் முடிவுகட்டி பாடம் கற்பிக்க வேண்டும் என்று உறுதி ஏற்போம்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார். #DMK #MKStalin #JayalalithaDeath
Tags:    

Similar News