செய்திகள்

வாணியம்பாடி அருகே குடிநீர் கேட்டு அரசு பஸ் சிறைபிடிப்பு

Published On 2019-01-29 21:51 IST   |   Update On 2019-01-29 21:51:00 IST
வாணியம்பாடி அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் அரசு பஸ்சை சிறைபிடித்து போராட்டம் செய்தனர்.
வாணியம்பாடி:

வாணியம்பாடி அருகே உள்ள மதனஞ்சேரி பகுதியில் சுமார் 2000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த பகுதிக்கு கடந்த 1 மாதமாக குடிநீர் முறையாக வழங்கபடவில்லை.

இது குறித்து சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் திம்மாம்பேட்டை வாணியம்பாடி செல்லும் சாலையில் இன்று அரசு பஸ்சை சிறைபிடித்து போராட்டம் நடத்தினர்.

இது குறித்து தகவலறிந்த வாணியம்பாடி தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகினர்.

ராணிப்பேட்டை அடுத்த கல்மேல்குப்பம் பகுதியில் கடந்த 6 மாதமாக குடிநீர் சரிவர வழங்கவில்லை. இதுகுறித்து பொதுமக்கள் ஊராட்சி அலுவலகத்திலும் மற்றும் கலெக்டரிடமும் மனு கொடுத்து உள்ளனர்.

ஆனால் மனுவின் மீது எந்தவித நடவடிக்கை எடுக்கபடவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஆற்காடு கல்புத்தூர் செல்லும் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த ராணிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் இலக்குவன் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். #tamilnews
Tags:    

Similar News