செய்திகள்

புதிய தேர்வு முறை பற்றிய மாணவர்களின் கோரிக்கை பரிசீலிக்கப்படும் - அண்ணா பல்கலைக்கழகம்

Published On 2019-01-26 12:51 GMT   |   Update On 2019-01-26 12:51 GMT
அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய தேர்வு முறை பற்றிய மாணவர்களின் கோரிக்கைகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது என பல்கலைக்கழக பதிவாளர் அறிவித்துள்ளார். #AnnaUniversity #StudentsProtest
சென்னை:

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் அரியர் முறைப்படி, குறிப்பிட்ட பாடத்தில் தேர்ச்சி அடையாதோர்களுக்கான தேர்வு, அடுத்த செமஸ்டரில் தேர்வினை எழுதலாம் என இருந்தது. 2017-ம் ஆண்டில் இருந்து அம்முறை மாற்றப்பட்டு, கிரெடிட் முறை அமல்படுத்தப்பட்டு தற்போது நடைமுறையில் உள்ளது.

இதனால் மாணவ, மாணவிகளின் தேர்ச்சி வீதம் குறைகிறது எனவும், விடைத்தாள் திருத்தம் செய்யும் முறை கடுமையாக்கப் பட்டிருப்பதால் தேர்வில் தேர்ச்சி பெறுவது கடினமாக உள்ளது எனவும் கூறினர். மேலும் இதனால் ஓராண்டு காலம் வீணாகிறது எனவும் வருத்தத்துடன் தெரிவித்திருந்தனர்.

இதையடுத்து, அண்ணா பல்கலைக்கழகத்தின் முன் திரண்ட மாணவ, மாணவிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக கிரெடிட் முறையை திரும்ப பெறவேண்டும் என வலியுறுத்தினர். இதையடுத்து மாணவர்களிடம் பல்கலைக்கழக பதிவாளர் குமார் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, மாணவர்களிடம் இருந்து எழுத்துப்பூர்வமாக மனுவை பெற்றுக்கொண்டார்.

இதற்கிடையே, தேர்வு சீர்திருத்தங்களை குறிப்பாக கிரெடிட் முறையை ரத்துசெய்ய முடியாது என பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய தேர்வு முறை பற்றிய மாணவர்களின் கோரிக்கைகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 

இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழகம்  பதிவாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிய தேர்வு முறை பற்றிய மாணவர்களின் கோரிக்கைகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. அரியர் தேர்வுகளை எழுதுவதற்கான புதிய விதிமுறைகள் விரைவில் அறிவிக்கப்படும், மாணவர்கள் நேரத்தை வீணடிக்காமல் அவர்களது படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார். #AnnaUniversity #StudentsProtest
Tags:    

Similar News